பேச்சிப்பாறை அணையை கட்டிய என்ஜினீயர் அலெக்சாண்டர் மிஞ்சினின் 150–வது பிறந்தநாள் விழா


பேச்சிப்பாறை அணையை கட்டிய என்ஜினீயர் அலெக்சாண்டர் மிஞ்சினின் 150–வது பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 9 Oct 2017 4:15 AM IST (Updated: 9 Oct 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

பேச்சிப்பாறை அணையை கட்டிய தலைமை என்ஜினீயர் அலெக்சாண்டர் மிஞ்சினின் 150–வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

குலசேகரம்,

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஹம்பரே அலெக்சாண்டர் மிஞ்சின். இவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மதுரை நகராட்சியின் என்ஜினீயராக பணியாற்றினார். பின்னர், பேச்சிப்பாறை அணையை கட்டும் பணியில் அவர் தலைமை என்ஜினீயராக பொறுப்பேற்றார். இந்த பணி 1897–ம் ஆண்டு தொடங்கி 1906–ம் ஆண்டு நிறைவடைந்தது.

அணை கட்டும் பணியை சிறப்பாக செய்து முடித்து பிரதான கால்வாய்களையும் அமைத்த மிஞ்சின், திருவிதாங்கூர் மன்னரின் நன்மதிப்பையும், பாராட்டையும் பெற்றார்.

நினைவிடம்

பின்னர், மலேரியா காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மிஞ்சின் 1913–ம் ஆண்டு தனது 45–வது வயதில் இறந்தார். அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்காக மன்னரின் உத்தரவின்படி அவரது உடல் அணையின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

 அன்று அவர் கட்டிய பேச்சிப்பாறை அணை இன்றும் குமரி மாவட்ட குடிநீருக்கும், விவசாயத்திற்கும் உயிர் நாடியாக உள்ளது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8–ந் தேதி அவர் பிறந்த நாளில் பல்வேறு தரப்பினர் அணை அருகில் உள்ள அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துவது வழக்கம்.

150–வது பிறந்த நாள்

அதன்படி அலெக்சாண்டர் மிஞ்சின் 150–வது பிறந்தநாள் விழா  பேச்சிப்பாறை அணை அருகே உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட நீர்பாசனத்துறை தலைவர் வக்கீல் வின்ஸ் ஆன்றோ தலைமை தாங்கினார். அன்னாசி பழ உற்பத்தியாளர் சங்க தலைவர் ஹென்றி முன்னிலை வகித்தார்.

 எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், மனோதங்கராஜ், ராஜேஷ்குமார் மற்றும்  பூமி பாதுகாப்பு சங்க தலைவர் பத்மதாஸ், பாசன சபை கூட்டமைப்பு தலைவர் புலவர் செல்லப்பா, பழங்குடி பாரதி சங்க தலைவர் சுரேஷ் சாமியார் காணி,  குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், குமரி திருவட்டார் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் காஸ்டன் கிளிட்டஸ் ஆகியோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.

இந்த விழாவில் காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story