கடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் போராட்டம்


கடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2017 10:45 PM GMT (Updated: 2017-10-10T00:52:40+05:30)

சம்பளம் வழங்க கோரி கடலூர் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கடலூர்,

கடலூர் நகராட்சியில் 260–க்கும் மேற்பட்ட நிரந்தர துப்புரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் நேற்று காலை வழக்கம் போல் துப்புரவு பணிகளை மேற்கொண்டு விட்டு நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அனைவரும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் கடந்த மாத(செப்டம்பர்) சம்பளத்தை நகராட்சி நிர்வாகம் உடனே வழங்க வேண்டும், பண்டிகை முன் பணம், சீருடை, வருங்கால வைப்பு நிதி கடன் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று கூறி கோ‌ஷமிட்டனர்.

மேலும் அவர்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறினர். இது பற்றி அறிந்ததும் ஆணையாளர் முஜிபுர்ரகுமான், துப்புரவு பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து துப்புரவு பணியாளர்களை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் நகராட்சி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story