வளசரவாக்கம் பகுதியில் பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது
வளசரவாக்கம் பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
வளசரவாக்கம் பகுதியில் தொடர்ந்து தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது. இதில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க வளசரவாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் சம்பத் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளையர்களை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது இருவரும் போரூரை சேர்ந்த கார்த்திக்(எ)டோரிகார்த்திக்(வயது 23), நெசப்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் பாண்டியன்(எ)கோவூர் கார்த்திக்(21) என்பதும் 2 பேரும் சேர்ந்து இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 7 பவுன் தங்க நகைகள் மற்றும் 600 கிராம் வெள்ளி பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பின்பு அவர்களை சிறையில் அடைத்தனர்.