தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரெயில் பணியின்போது ரசாயன கலவை வெளியேறியதால் பரபரப்பு


தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரெயில் பணியின்போது ரசாயன கலவை வெளியேறியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Oct 2017 3:45 AM IST (Updated: 10 Oct 2017 1:53 AM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் பணியின்போது தண்டையார்பேட்டையில் ரசாயன கலவை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராயபுரம்,

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்துக்கான பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தற்போது மெட்ரோ ரெயில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

வண்ணாரப்பேட்டையில் இருந்து கொருக்குப்பேட்டை வரை சுரங்கம் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில், தற்போது தண்டையார்பேட்டை பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. தண்டையார்பேட்டை அப்பாசாமி கோவில் தெருவில் நேற்று காலை சாலையோரத்தில் இருந்து திடீரென்று ரசாயன கலவை வெளியேறி ஆறாக ஓடியது.

உடனடியாக இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசாருக்கும், மெட்ரோ ரெயில் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடைசெய்தனர். மெட்ரோ ரெயில் அதிகாரிகள் சாலையில் ஓடிய ரசாயன கலவையை டிரம்களில் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறுகையில், ‘‘பூமிக்கடியில் எந்திரத்தின் மூலம் துளையிடும்போது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு மூடாமல்விட்ட ஆழ்குழாய் கிணறு வழியாக ரசாயன கலவை வெளியேறியுள்ளது. அந்த ஆழ்குழாய் கிணறை மூடிய பின்னர் பணிகள் தொடரும்’’ என்றனர்.

இதற்கு முன்பு வண்ணாரப்பேட்டை மேற்கு கல்லறை சாலை உள்பட 2 இடங்களில் வீடுகளில் பயன்படுத்தி மூடாமல்விட்ட ஆழ்குழாய் கிணறுகள் வழியாக ரசாயன கலவை வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


Next Story