கிருஷ்ணகிரி நகராட்சியுடன் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் மனு


கிருஷ்ணகிரி நகராட்சியுடன் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 9 Oct 2017 10:30 PM GMT (Updated: 9 Oct 2017 9:08 PM GMT)

கிருஷ்ணகிரி நகராட்சியுடன் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் கிராமமக்கள் மனு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் என 500-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் விவசாயத்தையும், கூலி வேலையையும் மட்டுமே நம்பி உள்ளோம். கடந்த 15 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து போனதால், நாங்கள் நம்பியிருக்கும் படேதலாவ் ஏரியும் வறண்டு தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடிக்கும் கீழ் போய்விட்டது. இதனால் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை கூட செலுத்த முடியாமல் திண்டாடி வருகிறோம். இந்த நிலையில் எங்கள் ஊராட்சியை கிருஷ்ணகிரி நகராட்சியுடன் இணைத்தால், எங்களுக்கு இரட்டை வரி விதிப்பு மூலம் மேலும் வரி சுமை ஏற்படும். விவசாய தொழில் நசிந்து போன நிலையில், நாங்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மட்டுமே நம்பியிருக்கிறோம்.

கைவிட வேண்டும்

எனவே, நகராட்சியுடன் இணைத்தால், வாழ்வாதாரமாக உள்ள தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தடைப்படும். குறிப்பாக எங்கள் ஊராட்சியில், குடியிருப்புகளை விட விவசாய நிலங்கள் தான் அதிகமாக உள்ளது. நகராட்சியுடன் இணைக்கும் போது விவசாய நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயரும். இதனால் பத்திர செலவு பல மடங்கு உயரும் நிலை ஏற்படும். மேலும் நகராட்சியுடன் இணைத்தால், நகராட்சி கழிவுகள், எங்கள் ஊராட்சியில் உள்ள அரசு நிலங்களில் கொட்ட வேண்டிய சூழ்நிலை வரும்.

அப்போது எங்களின் விவசாய நிலங்கள் மாசுபடும். மேலும் காற்று மாசடைந்து விவசாய தொழில் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும். எனவே, எங்கள் ஊராட்சி மக்களின் நலன் கருதி, காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியை கிருஷ்ணகிரி நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாதை அடைப்பு

சூளகிரி தாலுகா பி.குருபரப்பள்ளி ஊராட்சி பி.சிங்கரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முன்னாள் ஊராட்சி தலைவர் நாகராஜ் தலைமையில் நேற்று கலெக்டர் கதிரவனிடம் கோரிக்கை மனுவில், எங்கள் கிராமத்தின் மயாத்திற்கு செல்ல பாதை ஒன்று இருந்தது. இந்த நிலையில் அந்த பாதையை தனிநபர் ஒருவர் அடைத்து விட்டார். இது தொடர்பாக பல முறை அவரிடம் கேட்டும் பாதையை விட மறுக்கிறார். இதனால் ஊரில் யாரேனும் இறந்து விட்டால் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம்.

எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு காலம் காலமாக இருந்து வரும் மயான பாதையை மீட்டு நிரந்தரமாக வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story