கூலித்தொழிலாளி வெட்டிக் கொலை போலீஸ் நிலையத்தில் வாலிபர் சரண்


கூலித்தொழிலாளி வெட்டிக் கொலை போலீஸ் நிலையத்தில் வாலிபர் சரண்
x
தினத்தந்தி 10 Oct 2017 4:00 AM IST (Updated: 10 Oct 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

தோகைமலை அருகே கூலித்தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த வாலிபர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

தோகைமலை,

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாதிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்பலம் (வயது45). மரம்வெட்டும் கூலித்தொழிலாளி. இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் ரெங்கநாதன் (27). இவரது குடும்பத்தினருக்கும், பொன்னம்பலத்திற்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரெங்கநாதனின் தாய் சின்னபொண்ணுவிடம் பொன்னம்பலம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரெங்கநாதன் வெளியூர் சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் வீடு திரும்பியதும் தகராறு குறித்து மகனிடம் தாய் கூறினார்.

இந்த நிலையில் நேற்று காலை கொசூர் கடை வீதியில் பொன்னம்பலம் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ரெங்கநாதன் சென்று தனது தாயிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது ரெங்கநாதன் அருகில் உள்ள கறிக்கடையில் இருந்த அரிவாளை எடுத்து பொன்னம்பலத்தின் கழுத்தில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து கீழே விழுந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று மாலை பொன்னம்பலம் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையில் பொன்னம்பலத்தை கொலை செய்த ரெங்கநாதன், தோகைமலை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துகருப்பன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கைதான ரெங்கநாதன் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். கொலையான பொன்னம்பலத்திற்கு பொன்னாயி, முத்தாயி என 2 மனைவிகளும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கொசூர் கடைவீதியில் கூலித்தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story