மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளர்கள் பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 10 Oct 2017 4:30 AM IST (Updated: 10 Oct 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

இலுப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.

இலுப்பூர்,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள மாத்திராம்பட்டியை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 52). மலைக்குடிப்பட்டி அருகே உள்ள கல்லடைக்கான்பட்டியில் குடியிருந்தவர் வெள்ளக்கண்ணு (50). இவர்கள் இருவரும் கூலி தொழிலாளர்கள். தேவராஜன் தனக்கு சொந்தமான 2 ஆடுகளை விற்க முடிவு செய்து, அதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வெள்ளக்கண்ணுவையும், 2 ஆடுகளையும் ஏற்றிக்கொண்டு மாத்திராம்பட்டியில் இருந்து விராலிமலைக்கு நேற்று காலை சென்று கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை தேவராஜன் ஓட்டினார். 2 ஆடுகளை வைத்துக்கொண்டு வெள்ளக்கண்ணு பின்னால் அமர்ந்து வந்தார். இலுப்பூர் அருகே உள்ள திரடங்கிகுளம் என்ற இடத்தில் சென்றபோது, மணப்பாறையில் இருந்து கீரனூர் நோக்கி ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தேவராஜனும், வெள்ளக்கண்ணும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். இதில் 2 ஆடுகளும் பலியானது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து இலுப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லாரி மோதி பலியான தேவராஜன், வெள்ளக்கண்ணுவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் மணப்பாறை அருகே உள்ள புதுமணியாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த மூர்த்தியை (36) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூலி தொழிலாளர்கள் லாரி மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Tags :
Next Story