லாரி உரிமையாளர் கொலையில் 2 பேர் கைது போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்


லாரி உரிமையாளர் கொலையில் 2 பேர் கைது போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 10 Oct 2017 4:30 AM IST (Updated: 10 Oct 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் அருகே லாரி உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ஆண்டிமடம்-காடுவெட்டி ரோடு திருகளப்பூர் கிராம சுடுகாடு அருகே கடந்த 7-ந்தேதி நின்று கொண்டிருந்த லாரியில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த லாரியில் இருந்த ஆர்.சி. புத்தகத்தை வைத்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை நடத்திய போது, கொலை செய்யப்பட்ட கிடந்த நபர் கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு விளாத்திவிளை கிராமத்தை சேர்ந்த கிளாட்வின் (வயது 37) என்பதும், அவர் லாரி உரிமையாளர் என்பதும் தெரிய வந்தது. ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த கிளாட்வினின் உடலை அவரது உறவினர்கள் அடையாளம் காண்பித்தனர். மேலும் தற்காலிக டிரைவர்களை நியமித்து லாரியில் மணல் அள்ளி விற்கும் தொழிலை கிளாட்வின் செய்து வந்தார் என உறவினர்கள் போலீசில் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கிளாட்வினிடம் வேலை பார்த்த தற்காலிக லாரி டிரைவர்கள் தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதினர்.

ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி தலைமையில் ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடினர். இந்த நிலையில் கன்னியாகுமரிக்கு விரைந்த தனிப்படை போலீசார் கிளாட்வினின் தொழில்முறை நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 4 மாதங்களாக கிளாட்வினிடம் லாரி டிரைவராக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காமராஜர்புரத்தை சேர்ந்த சிவக்குமார் (39), தேவாமங்களத்தை சேர்ந்த செல்வம் (35) ஆகிய 2 பேர் வேலை செய்தது போலீசுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து கிளாட்வினின் கொலை வழக்கில் தொடர்புடைய லாரி டிரைவர்கள் சிவக்குமார், செல்வம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிந்த விவரங்கள் வருமாறு:-

கிளாட்வினிடம் தற்காலிக டிரைவராக சிவக்குமார் வேலை செய்துள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் கூடலையாத்தூர் வெள்ளாற்றில் மணல் அள்ளுவதற்காக கடந்த 6-ந்தேதி ஆண்டிமடம் பகுதிக்கு லாரியில் கிளாட்வின் வந்தார். அப்போது கிளாட்வினிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு லாரியை கடத்தி செல்ல சிவக்குமார் திட்டம் தீட்டி உள்ளார். மேலும் போலீசில் மாட்டிவிடக்கூடாது என்பதற்காக நண்பர் செல்வத்துடன் சேர்ந்து கிளாட்வினை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி தான் வேறு வேலைக்கு செல்ல போகிறேன் என கிளாட்வினிடம் கூறி, மாற்று டிரைவராக செல்வத்தை வைத்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். கிளாட்வினும் சம்மதித்து செல்வத்தை சேர்த்துக்கொண்டார்.

சம்பவத்தன்று இரவு செல்வம், கிளாட்வினுடன் சேர்ந்து சிவக்குமாரும் மது அருந்தினார். போதையில் இருந்த போது செல்வமும், சிவக்குமாரும் சேர்ந்து கிளாட்வினை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் கிளாட்வின் பணத்தை எங்கு வைத்திருக்கிறார் என தேடி உள்ளனர். ஆனால் பணத்தை கண்டுபிடித்து எடுக்க முடியவில்லை. பின்னர் கிளாட்வின் உடலை லாரியில் போட்டுக்கொண்டு ஓட்டி சென்றுள்ளனர். திருகளப்பூர் அருகே லாரி நின்று விட்டதால் அவர்கள் பயந்தனர். போலீசில் மாட்டிவிடக்கூடாது என்பதற்காக லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். ஆனால் அவர்களை போலீசார் விசாரணை நடத்தி கைது செய்தனர்.

மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story