டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டம்


டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2017 4:30 AM IST (Updated: 10 Oct 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் தாலுகா தருவைகுளம் சமத்துவபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.

ஓட்டப்பிடாரம் தாலுகா தருவைகுளம் சமத்துவபுரத்தை சேர்ந்த பெண்கள் சுமார் 40 பேர் மனு கொடுக்க மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் திடீரென மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர்கள் கலெக்டர் வெங்கடேசிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். அந்த மனுவில், எங்கள் ஊரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு அதிகாரிகள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் டாஸ்மாக் கடை 2 மாதங்களில் மூடப்பட்டு மாற்று இடத்தில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் டாஸ்மாக் கடை மூடப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியில் உள்ள பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் நலன் கருதி அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மச்சேந்திரன் கொடுத்த மனுவில், சாயர்புரம் மெயின் பஜாரில் கோவில், கல்லூரி அருகே அமைந்து உள்ள டாஸ்மாக் கடையை மாவட்ட நிர்வாகம் உடனே மூட வேண்டும் என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நெல்லை பிரிவில் வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அபராத வட்டி மற்றும் முதலாக்கத்தின் மீதான வட்டி தள்ளுபடி விவரத்தை, அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஒதுக்கீடுதாரர்களுக்கும் கடிதம் மூலம் தகவல் தெரியப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் இருந்து 3 சென்ட், கால்டுவெல் காலனி, பிரையண்ட் நகர், சிதம்பர நகர், பழைய பஸ் நிலையம் வழியாக சிலுவைப்பட்டிக்கு இயக்கப்பட்டு வந்த பஸ் கடந்த சில மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி- கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மாணவர்கள் நலன் கருதி, அந்த பஸ்சை இயக்க மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும்.

விளாத்திகுளம் தாலுகா ஆற்றங்கரை கிராமத்தை சேர்ந்த பெண்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றினோம். எங்களுக்கு 3 மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே எங்களுடைய சம்பள பணம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

புதுக்கோட்டை ராஜூவ் நகர், பாலசிங் நகர், அய்யப்பன் நகரை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு கீழகூட்டுடன் காடு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து, குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது கடந்த 6 மாதங்களாக எங்கள் பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதிக்கு உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

திருச்செந்தூர் தாலுகா வீரபாண்டியபட்டினம் ஜே.ஜே.நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதி வீரபாண்டியபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்டது. இங்கு மக்களுக்கு 5 நாட்களுக்கு ஒருமுறை கிணற்று தண்ணீர் வழங்கப்படுகிறது. எங்களுக்கு குடிப்பதற்கு ஆற்று நீர் வழங்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் சாலைகள் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியில் தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கலையரங்கம் தென்புறம் உள்ள இடத்தில் 24 கடைகள் தினசரி வாடகை செலுத்தி கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. தற்போது வாடகை வசூல் செய்வதை நிறுத்தி விட்டு விரைவில் கடையை காலி செய்ய கோரி, கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாக தெரிகிறது. அவ்வாறு கடைகளை காலி செய்தால், வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அதே இடத்தில் நிரந்தரமாக வியாபாரம் செய்ய மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டு்ம் என்று கூறி இருந்தனர். 

Related Tags :
Next Story