பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி அனைத்துக்கட்சியினர் சாலை மறியல்


பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி அனைத்துக்கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 Oct 2017 10:45 PM GMT (Updated: 9 Oct 2017 9:13 PM GMT)

பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கீழையூரில் அனைத்துக்கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் கீழையூர் கடைத்தெருவில் 2016-2017-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு தொகையை உடனே வழங்கக்கோரி அனைத்துக்கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கருணாநிதி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாகை மாவட்ட செயலாளர் முருகையன், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வாஎடிசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி இளபழனியப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முருகையன், தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி பாலகிருஷ்ணன், தி.மு.க. ஊராட்சி செயலாளர் மகேஷ்கண்ணன், வெண்மனச்சேரி ஊராட்சி செயலாளர் ஜோதிபாஸ், காங்கிரஸ் கட்சி, பா.ம.க., தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் தாசில்தார் மணிவண்ணன், நாகை நியு இந்தியா அசூரன்ஸ் நிறுவன மேலாளர் கணபதிசுப்பிரமணியன், வேளாண்மை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன், கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 2016-17-ம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டு தொகை கீழையூர் ஒன்றியத்தில் உள்ள கீழையூர், பாலக்குறிச்சி, திருப்பூண்டி ஆகிய கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படாமல் உள்ள ஊராட்சிகளுக்கு உடனே பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். புதிதாக கடன் வழங்க வேண்டும்.

100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்துவதோடு, தினக்கூலி ரூ.400 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதைதொடர்ந்து வருகிற 20-ந்தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் நாகை - திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல் நாகையை அடுத்த சிக்கலில் நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் அனைத்துக்கட்சிகள் சார்பில் 2016-2017-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து தலைமை தாங்கினார். இதில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. 

Related Tags :
Next Story