இலங்கையில் உள்ள படகை மீட்க சென்ற நாகை மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்


இலங்கையில் உள்ள படகை மீட்க சென்ற நாகை மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்
x
தினத்தந்தி 9 Oct 2017 11:15 PM GMT (Updated: 9 Oct 2017 9:13 PM GMT)

இலங்கையில் உள்ள படகை மீட்க சென்ற நாகை மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்கியதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

நாகப்பட்டினம்,

கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வது வழக்கமாக நடந்து வருகிறது. அவ்வாறு மீன்பிடிக்க சென்ற நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்று, பின்னர் அவர்களை விடுவித்தனர். ஆனால் அவர்களது விசைபடகுகள் விடுவிக்கப்படாமல் இலங்கை யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி வந்ததால், முதல்கட்டமாக இலங்கை அரசு தமிழக மீனவர்களின் 42 படகுகள் மட்டும் விடுவிப்பதாக அறிவித்தது. இதையடுத்து ராமேசுவரம், புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 2 கட்டங்களாக இலங்கைக்கு சென்று 10 படகுகளை மீட்டு கொண்டு வந்துள்ளனர். இதை தொடர்ந்து 3-ம் கட்டமாக நாகை மீனவர்கள் தங்களது படகுகளை மீட்டு வருவதற்காக இலங்கைக்கு சென்றனர்.

இதில் நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த சிவ பெருமாள் மகன்கள் செந்தில்குமார் (வயது45), சண்முக நாதன் (42), சிங்காரவேலு (40), சாமிநாதன், கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த சுகுமார் (38) ஆகிய 5 பேரும் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இருந்து சென்றனர். இவர்களுடன் இந்திய கடற்படையினரும் சென்றனர். கோடியக்கரையில் இருந்து 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் இவர்களை இலங்கை கடற்படையினர் வந்து அழைத்து செல்ல வேண்டும். இதனால் படகை நிறுத்தி வைக்குமாறு இந்திய கடற்படையினர் மீனவர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து மீனவர்கள் நடுக்கடலில் படகை நிறுத்தி காத்திருந்தனர். ஆனால் இலங்கை கடற்படையினர் அங்கு வருவதற்கு 3 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. பின்னர் அங்கிருந்து இலங்கைக்கு கிளம்பியபோது மீனவர்கள் சென்ற படகு பழுதாகிவிட்டது. அதனை சரி செய்துவிட்டு கிளம்பும்போது காலதாமதம் ஆகிவிட்டதால், மீனவர்களை மண்டபத்திற்கு செல்லுமாறு அவர்களுடன் சென்ற இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அதற்கு மண்டபம் செல்வதற்கு டீசல் குறைவாக உள்ளது என்று மீனவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த இந்திய கடற்படையினர், மீனவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் செந்தில், சண்முகநாதன், சுகுமார் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். அதை தொடர்ந்து நாகை மீனவர்கள் நேற்று நாகை துறைமுகத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து காயம் அடைந்த மீனவர்கள் 3 பேரை ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர் களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அக்கரைப்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் கூறும்போது, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறைபிடிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட படகுகளை மீட்க நாகையில் இருந்து மீனவர்கள் இலங்கைக்கு சென்றனர். நடுக்கடலில் படகு பழுதாகியுள்ளது. இதனை சரி செய்ய நீண்ட நேரம் ஆகியதால், ஆத்திரமடைந்த இந்திய கடற்படை யினர் மண்டபம் செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் மண்டபம் சென்றால் டீசல் பற்றாக்குறை ஏற்படும் என்பதற்காக நேராக இலங்கைக்கு செல்லலாம் என்று மீனவர்கள் கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த இந்திய கடற்படையினர் மீனவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இலங்கை சென்று படகை மீட்டு வருவதற்காக தமிழக மீன்வள துறை சார்பில் 450 லிட்டர் டீசல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் நாகையில் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Tags :
Next Story