‘எம்.பி.பி.எஸ். சீட்’ வாங்கி தருவதாக ரூ.21 லட்சம் மோசடி; பெண் கைது


‘எம்.பி.பி.எஸ். சீட்’ வாங்கி தருவதாக ரூ.21 லட்சம் மோசடி; பெண் கைது
x
தினத்தந்தி 11 Oct 2017 12:43 AM GMT (Updated: 2017-10-11T06:13:03+05:30)

எடப்பாடியில் ‘எம்.பி.பி.எஸ் சீட்‘ வாங்கி தருவதாக ரூ.21 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக பேராசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவர் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் மருந்தாளுனராக வேலை செய்து வருகிறார். இவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது மகள் வைடூரியா கடந்த 2014-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 986 மதிப்பெண்கள் பெற்றார். மகளை மருத்துவ படிப்பில் சேர்ப்பதற்காக சேலம் அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு சென்றேன். அப்போது அங்கிருந்த கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார் (வயது 45) என்பவர், என்னிடம் மருத்துவ படிப்பிற்கான அனைத்து இடங்களும் பூர்த்தியாகிவிட்டது. வெளியே ‘எம்.பி.பி.எஸ். சீட்‘ வாங்க ரூ.35 லட்சம் செலவாகும், இதற்கு ஏஜெண்டாக நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள தலமலைப்பட்டியை சேர்ந்த சஞ்சீவி (50) என்பவர் உள்ளார். அவர் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு இடம் பிடித்து கொடுக்கும் பணியை செய்கிறார் என்றார்.

ரூ.21 லட்சம்

இதையடுத்து செந்தில்குமார் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு என்னிடம் பேசினார். கடந்த 15-6-2014-ந் தேதி செந்தில்குமார் மற்றும் சஞ்சீவி, அவருடைய மனைவி சித்ரா (45), மகள் ஆதிபகவதி(22) ஆகிய 4 பேர் என்னுடைய வீட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்களிடம் தவணை முறையில் ரூ.21 லட்சத்தை கொடுத்தேன்.

அதன்பேரில் எனது மகளுக்கு மேல்மருவத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் ‘எம்.பி.பி.எஸ். சீட்‘ வாங்கி தருவதாகவும், கல்லூரி நிர்வாகம் நேரடியாக பணத்தை உங்களிடம் வாங்க மாட்டார்கள் என்றும், எங்களை போன்ற ஏஜெண்டுகள் மூலம் தான் பணம் வாங்குவார்கள் எனவும் அவர்கள் கூறினர். ஆனால் அதற்கு பின்பு அவர்கள் ‘எம்.பி.பி.எஸ். சீட்‘ வாங்கி கொடுக்கவில்லை.

பெண் கைது

மேலும் இதுதொடர்பாக நான் கேட்டபோது, சஞ்சீவி கத்தியை காட்டி என்னை மிரட்டினார். எனவே மருத்துவ கல்லூரியில் ‘எம்.பி.பி.எஸ். சீட்‘ வாங்கி தருவதாக கூட்டு சதி செய்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

அதன்பேரில் நேற்று சஞ்சீவி, சித்ரா, ஆதிபகவதி, செந்தில்குமார் ஆகிய 4 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்த்தனாரி வழக்குப்பதிவு செய்தார். இதில் சித்ரா கைது செய்யப்பட்டார். மற்ற 3 பேரை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

Next Story