பொருட்களின் எடை அளவு குறைவாக இருப்பதை கண்டித்து ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் தர்ணா


பொருட்களின் எடை அளவு குறைவாக இருப்பதை கண்டித்து ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் தர்ணா
x
தினத்தந்தி 11 Oct 2017 6:13 AM IST (Updated: 11 Oct 2017 6:13 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட் களின் எடை அளவு குறைவாக இருப்பதை கண்டித்து கடையை முற்றுகையிட்டு பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருச்சி,

திருச்சி காந்தி மார்க்கெட் தாராநல்லூரை அடுத்து உள்ள வெற்றிலைபேட்டை பகுதியில் 2 அமராவதி கூட்டுறவு ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக இந்த கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை. கடைகளில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களின் எடை அளவு குறைவாக உள்ளது. மேலும் ஊழியர்கள் அல்லாத தனிப்பட்ட நபர்களை வைத்து பொருட்கள் எடை போட்டு வழங்கப்படுகிறது.

அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வேண்டு மென்றால் வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறி பொருட்களும் வாங்க வேண்டும் என்று ஊழியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர் என்று கூறி, அதனை கண்டித்து அப்பகுதி பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ரேணுகா தலைமையில் நேற்று அந்த ரேஷன் கடைகளில் ஒன்றை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காந்தி மார்க்கெட் போலீசார், திருச்சி கிழக்கு தனி தாசில்தார் (வட்ட வழங்கல் அதிகாரி) முத்துசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தாசில்தார் மேற்கண்ட பிரச்சினைகள் இனிமேல் இந்த ரேஷன் கடைகளில் நடைபெறாது என்று எழுத்துப்பூர்வமாக ஒரு பேப்பரில் எழுதி போராட்டம் நடத்திய பெண்களிடம் கொடுத்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து அந்த ரேஷன் கடைகளில் வழக்கம்போல் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது. 

Related Tags :
Next Story