2 பேரை வெட்டிக்கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு


2 பேரை வெட்டிக்கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 12 Oct 2017 4:45 AM IST (Updated: 11 Oct 2017 11:55 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அருகே உள்ள பேரூரணியை சேர்ந்தவர் பத்மநாதன்(வயது 26). இவருடைய திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பத்மநாதனின் உறவினர்கள் தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5–வது தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் காசிராஜன்(24), குலையன்கரிசலை சேர்ந்த நாராயணன் மகன் ராஜலிங்கம்(20) ஆகியோர் வந்தனர்.

காசிராஜன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பு கேமிரா ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். ராஜலிங்கம் சென்னை பச்சையப்பா கல்லூரியில் பி.காம். 3–ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர்கள் பேரூரணியில் திருமண விழாவையொட்டி டிஜிட்டல் போர்டுகளை கட்டிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த பேரூரணி நடுத்தெருவை சேர்ந்த ராஜ்குமார் மகன் விக்ரம்(22) என்பவருக்கும், காசிராஜன், ராஜலிங்கம் ஆகியோருக்கும் இடையே டிஜிட்டல் போர்டு வைப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பிறகு காசிராஜன், ராஜலிங்கம் ஆகிய இருவரும் அந்த பகுதியில் உள்ள மோட்டார் அறையின் மாடியில் படுத்து தூங்கி விட்டனர். இதைத்தொடர்ந்து நள்ளிரவில் விக்ரம், அவர்கள் படுத்து தூங்கி கொண்டு இருந்த மோட்டார் அறையின் மாடிக்கு சென்றார். அங்கு காசிராஜன், ராஜலிங்கம் ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தட்டப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி வழக்குப்பதிவு செய்து விக்ரமை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2–வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன், குற்றம் சாட்டப்பட்ட விக்ரமுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அதனை ஏககாலத்தில் அனுபவிக்கவும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஏ.வி.முத்து ஆஜர் ஆனார்.


Next Story