தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் கேட்டதை கண்டித்து முற்றுகை போராட்டம்


தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் கேட்டதை கண்டித்து முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2017 10:30 PM GMT (Updated: 11 Oct 2017 8:55 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சர்வதேச குடியுரிமை பள்ளி உள்ளது.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சர்வதேச குடியுரிமை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் காலாண்டு தேர்வு அடிப்படையில் மாணவர்களுக்கு ‘ஏ, பி, சி, டி’ என 4 வகையான தரவரிசை பிரிக்கப்பட்டுள்ளது.

இதில், ‘பி கிரேடு’ மாணவர்கள் ரூ.15 ஆயிரம் கட்டணமும், ‘சி கிரேடு’ மாணவர்கள் ரூ.30 ஆயிரமும் செலுத்த வேண்டும் எனவும், ‘டி கிரேடு’ மாணவர்கள் தங்கள் மாற்றுச்சான்றிதழை பெற்றுக்கொள்ளவும், அதற்கு தங்களது பெற்றோர்களிடம் கையொப்பம் வாங்கி வர வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகம் மாணவர்களை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து மாணவர்களின் பெற்றோர்கள் சுமார் 500–க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுபற்றி மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், கடந்த ஆண்டை விட 2, 3 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம். அவர்கள் வருகிற 23–ந் தேதி வரை அவகாசம் கேட்டுள்ளனர். இதில், சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் 24–ந் தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.


Next Story