காஞ்சீபுரம் அருகே ரூ.2½ கோடி ஐம்பொன்சிலை மீட்பு 4 பேர் கைது


காஞ்சீபுரம் அருகே ரூ.2½ கோடி ஐம்பொன்சிலை மீட்பு 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2017 10:45 PM GMT (Updated: 11 Oct 2017 8:55 PM GMT)

காஞ்சீபுரம் அருகே ரூ.2½ கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம்,

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் உத்தரவின்பேரில் போலீசார் தமிழகம் முழுவதும் சிலை கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை–பெங்களூரு நெடுஞ்சாலை காஞ்சீபுரம் வழியாக ஐம்பொன் சிலை ஒன்று கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிலைகடத்தல் தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டுகள் சிவசங்கரன், ரகுவரன், ரமேஷ் மற்றும் போலீசார் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலை காஞ்சீபுரத்தை அடுத்த ஆரியபெரும்பாக்கத்தில் சாலையோரம் ஒரு வேன் நின்றுகொண்டிருந்தது. அதில் 4 பேர் இருந்தனர்.

இதை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரத்தை அடுத்த ஒழுகரை பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 24), தட்சிணாமுர்த்தி (25), மாங்கால் கூட்ரோட்டை சேர்ந்த மகேந்திரன் (25), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சேகர் (25) என்பது தெரியவந்தது. வேனை சோதனை செய்தபோது அதில் 1¾ அடி உயரமும், 17 கிலோ எடையும் உள்ள ஐம்பொன் சிலை ஒன்று இருப்பது தெரிய வந்தது. இது 800 ஆண்டு பழமை வாய்ந்த சைவ சமய புரவலர்களில் ஒருவரான சுந்தரரின் சிலை என்பது தெரியவந்தது.

இந்த சிலையின் மதிப்பு ரூ.2½ கோடி ஆகும். சிலையை மலேசியா நாட்டை சேர்ந்தவர்களுக்கு விற்க கடத்தி சென்றபோது போலீசார் சிலையை மீட்டனர். சிலை கடத்தியதாக போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

இந்த சிலை எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது. யாரிடம் வாங்கி யாரிடம் விற்க கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து ஐ.ஜி பொன் மாணிக்கவேல் விசாரணை நடத்தி வருகிறார். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன். 2 மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் வேறு சிலை திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story