அனுமதியின்றி மணல் அள்ளி சென்ற 7 பேர் கைது 5 லாரிகள், 2 டிராக்டர்கள் பறிமுதல்


அனுமதியின்றி மணல் அள்ளி சென்ற 7 பேர் கைது 5 லாரிகள், 2 டிராக்டர்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Oct 2017 4:30 AM IST (Updated: 12 Oct 2017 3:31 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி சென்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 5 லாரிகள், 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செம்பியன்மகாதேவி பகுதியில் கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான வயல்களில் இருந்து அனுமதியின்றி லாரிகள் மற்றும் டிராக்டர்களில் மணல் அள்ளி செல்வதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் வந்தது. அதைதொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் செம்பியன்மகாதேவி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மணல் அள்ளி சென்ற 5 லாரிகள் மற்றும் 2 டிராக்டர்களை போலீசார் பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த லாரிகள் மற்றும் டிராக்டர்களில் அனுமதியின்றி மணல் அள்ளி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து லாரி டிரைவர்கள் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் நாலாநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜப்பா மகன் கருணாநிதி (வயது35), அதேபகுதியை சேர்ந்த பிச்சை மகன் நடராஜன் (34), திருச்சி துவாக்குடி பகுதியை சேர்ந்த ராஜமுத்து மகன் ராஜா (32), தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கதிரவன் (36), ராமநாதபுரம் ஏனாதி வடக்கு தெருவை சேர்ந்த முனியசாமி மகன் ராஜேந்திரன் (31) ஆகியோரையும், டிராக்டர் டிரைவர்கள் தலைஞாயிறு கோவிந்தபிள்ளை தெருவை சேர்ந்த கனகசுந்தரம் மகன் அழகுசெல்வம் (24), வேளானிஉந்தல் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (42) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 5 லாரிகள் மற்றும் 2 டிராக்டர்களையும் பறி முதல் செய்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story