குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் போது பக்தர்களிடம் திருடப்பட்ட 44 பவுன் தங்க நகைகள் மீட்பு


குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் போது பக்தர்களிடம் திருடப்பட்ட 44 பவுன் தங்க நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 12 Oct 2017 4:15 AM IST (Updated: 12 Oct 2017 3:32 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின்போது பக்தர்களிடம் திருடப்பட்ட 44 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது, பக்தர்களிடம் இருந்து 44 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமி திருடி சென்று விட்டார். இதுதொடர்பாக குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் போலீஸ் நிலையங்களில் மொத்தம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் தஞ்சாவூரை சேர்ந்த சுகுணா (வயது 37) என்பதும், தசரா திருவிழாவில் நகை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சுகுணாவை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 44 பவுன் தங்க நகைகளை மீட்டு உள்ளனர்.

20 மோட்டார் சைக்கிள்கள்

இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் ஈடுபட்ட முருகன் என்ற குருகாட்டூர் முருகன்(38), அய்யனார் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர சாலையோரங்களில் சந்தேகப்படும்படியாக நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களின் பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் 12 மோட்டார் சைக்கிள்களும், ஒரு காரும் மீட்கப்பட்டு உள்ளது.

மேலும் தாளமுத்துநகரில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நாலாட்டின்புதூரில் நடந்த 2 திருட்டு வழக்குகளில் 2 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 8 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் கூறினார்.


Related Tags :
Next Story