ரூ.29 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் முதல்–அமைச்சர் திறந்து வைத்தார்


ரூ.29 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் முதல்–அமைச்சர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 11 Oct 2017 11:00 PM GMT (Updated: 11 Oct 2017 10:03 PM GMT)

தூத்துக்குடி அருகே, குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.29 கோடியே 15 லட்சம் செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று காலை திறந்து வைத்தார்.

தூத்துக்குடி,

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம், தூத்துக்குடி மாநகரில் உள்ள ஓடை, சாலை ஓரங்கள் போன்ற ஆட்சேபகரமான பகுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் சுகாதாரமற்ற நிலையில் குடிசைகளில் 444 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களை மறுகுடியமர்வு செய்வதற்காக தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ராஜீவ்காந்தி நகரில் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி 5.12 ஏக்கர் பரப்பில், ரூ.29 கோடியே 15 லட்சம் செலவில் தரைதளம் மற்றும் இரண்டு அடுக்கு மாடியுடன் கூடிய குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. அங்கு மொத்தம் 444 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீடும் தலா 341 சதுர அடி பரப்பு கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை, பால்கனி, குளியலறை, கழிவறை ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.

இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். புதிய வீடுகளை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து பயனாளி நீலவேணி, நன்றி தெரிவித்து பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மேற்பார்வை என்ஜினீயர் எட்வின்சாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story