தரைப்பாலத்தின் மீது 4 அடி உயரத்திற்கு மேல் செல்லும் பாலாற்று வெள்ளம்


தரைப்பாலத்தின் மீது 4 அடி உயரத்திற்கு மேல் செல்லும் பாலாற்று வெள்ளம்
x
தினத்தந்தி 13 Oct 2017 5:00 AM IST (Updated: 12 Oct 2017 7:54 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே தரைப்பாலத்தின் மீது 4 அடி உயரத்திற்கு மேல் பாலாற்று வெள்ளம் செல்கிறது. இதனால் 15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆம்பூர்,

பாலாற்று நீர்பிடிப்பு பகுதியிலும், ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையாலும் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஒருவாரமாக பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு வந்தாலும் நேற்று முன்தினம் முதல் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாலாற்று வெள்ளத்தால் வேலூர் மாவட்டம் ஆம்பூரை சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

பேரணாம்பட்டு மலட்டாற்று வெள்ளமும் அதிகரித்து உள்ளது. மலட்டாற்று வெள்ளம் நரியம்பட்டு தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்கிறது. இதனால் நரியம்பட்டு வழியாக போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதேபோல் பாலாற்று வெள்ளமும், மலட்டாற்று வெள்ளமும் ஒன்றாக சேரும் பச்சகுப்பம் பகுதியில் பாலாறு முழுவதும் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்குள்ள பச்சகுப்பம் தரைப்பாலத்தின் மேல் 4 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் செல்கிறது. தரைப்பாலத்தில் உள்ள பாதுகாப்பு கம்பிகளை மூழ்கடிக்கும் அளவுக்கு நேற்று காலை முதல் தண்ணீர் அதிகமாக செல்கிறது.

மேலும் பச்சகுப்பம் தரைப்பாலத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பகுதி சேதமடைந்து உள்ளது. இதனால் அங்கு மணல் மூட்டைகளை அடுக்கி தரைப்பாலத்தை பாதுகாத்து வருகின்றனர். தரைப்பாலத்தில் அளவுக்கு அதிகமான தண்ணீர் செல்வதால் பச்சகுப்பம் தரைப்பாலத்திலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பச்சகுப்பம், நரியம்பட்டு தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அழிஞ்சிகுப்பம், ராஜக்கல், எம்.வி.குப்பம், ரெட்டிமாங்குப்பம் உள்ளிட்ட 15–க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அடியோடு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆம்பூரில் இருந்து பச்சகுப்பம், நரியம்பட்டு வழியாக செல்லும் பஸ் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து இல்லாததால் கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர். அவர்கள், ஆம்பூர் பகுதிக்கு வர பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்நிலைபகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் ஊராட்சியில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்காக சிலர் மாட்டு வண்டியில் அள்ளிக்கொண்டு அப்பகுதியில் உள்ள பாலாற்று பகுதிக்கு சென்றனர். அங்கு மாட்டு வண்டி திரும்பிய போது பாலாற்று வெள்ளத்தில் சிக்கி அங்குள்ள பள்ளத்தில் மாட்டு வண்டி கவிழ்ந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மாட்டையும், வண்டியையும் மீட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story