லாரி கன்டெய்னர் மின்கம்பியில் உரசியதால் விபரீதம் மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் சாவு
தூத்துக்குடியில் லாரி கன்டெய்னர் மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி,
திருச்சி மாவட்டம் மணப்பாறை மதுரை ரோட்டை சேர்ந்தவர் லூர்துசாமி (வயது 62). இவருக்கு சின்னபொன்னு என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ரூபன் என்ற மகனும், பிருந்தா என்ற மகளும் உள்ளனர். லூர்துசாமி தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று காலையில் துறைமுகம் கேம்ப்–1 பகுதியில் இருந்து லாரியில் கன்டெய்னரை ஏற்றி கொண்டு தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி அருகே உள்ள தனியார் குடோனுக்கு சென்று கொண்டிருந்தார்.
காலை 10.20 மணியளவில் ரோட்டின் ஓரத்தில் லாரியை நிறுத்தி உள்ளார். அப்போது அந்த பகுதியில் தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் கன்டெய்னர் உரசியபடி நின்று உள்ளது. இதனை கவனிக்காத லூர்துசாமி லாரியில் இருந்து கீழே இறங்கினார். அவர் ஒரு காலை டயரில் வைத்துக் கொண்டு, மற்றொரு காலை தரையில் வைத்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் லூர்துசாமி தூக்கி வீசப்பட்டு உடல் கருகி பரிதாபமாக இறந்தார். அதே நேரத்தில் லாரி டயரிலும் தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேசுவரன், தென்பாகம் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், லூர்துசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.