குடிநீர் குழாய் பதிக்க நெடுஞ்சாலைத்துறையினர் எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி


குடிநீர் குழாய் பதிக்க நெடுஞ்சாலைத்துறையினர் எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 13 Oct 2017 4:15 AM IST (Updated: 13 Oct 2017 1:39 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் குழாய் பதிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் உடுமலை ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி-உடுமலை ரோடு தேர்நிலை திடலில் இருந்து ஊஞ்சவேலாம்பட்டி வரை 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகள் ரூ.24 கோடியே 77 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிக்கு ரோட்டோரத்தில் குழி தோண்டும் போது, அந்த வழியாக செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது.

இதன் காரணமாக மாக்கினாம்பட்டி, சின்னாம்பாளையம், சோலபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் கடந்த 40 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இந்த நிலையில் மாக்கினாம்பட்டி ஊராட்சி மூலம் ரூ.3 லட்சம் செலவில் புதிதாக குழாய் வாங்கப்பட்டு உள்ளது.

ரோட்டோரத்தில் குழாய் பதிக்க வேண்டிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பணிகளை முடித்து விட்டனர்.

இதனால் அந்த பகுதிகளில் குழி தோண்ட அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டனர். இதனால் குழாய் வாங்கியும், பதிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் குழாய் பதிக்க அனுமதிக்க வேண்டி மாக்கினாம்பட்டி பொதுமக்கள் உடுமலை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்தனர். மாக்கினாம்பட்டியில் இருந்து பெண்கள் உள்பட சுமார் 200 பேர் உடுமலை ரோட்டிற்கு வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார், ஒன்றிய அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் வந்து, ஒன்றிய அதிகாரிகளுடன் குழாய் பதிக்கப்படும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பிறகு ரோட்டோரத்தில் குழாய் பதிக்க எந்தவித இடையூறும் இருக்காது என்று அனுமதி வழங்கினர்.

அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story