மர்டர் மணிகண்டன், எழிலரசி சந்திப்பு விவகாரம்: லட்சக்கணக்கில் பணம் பெற்ற ஜெயில் அதிகாரிகள்


மர்டர் மணிகண்டன், எழிலரசி சந்திப்பு விவகாரம்: லட்சக்கணக்கில் பணம் பெற்ற ஜெயில் அதிகாரிகள்
x
தினத்தந்தி 13 Oct 2017 3:45 AM IST (Updated: 13 Oct 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு ஜெயிலில் ஆண், பெண் கைதிகள் சந்தித்து பேசி எதிரிகளை தீர்த்துக்கட்ட சதி திட்டிய விவகாரத்தில் மேலும் 3 வார்டன்களுக்கு தொடர்பு உள்ளதாக தற்போது திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தின் புறநகர் பகுதியான காலாப்பட்டில் பல ஏக்கர் பரப்பளவில் மத்திய சிறைச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் போலீசாரால் கொண்டு வரப்பட்டு இங்கு அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஜெயிலின் நுழைவாயிலுக்குள் சென்றதும் 300 மீட்டர் தூரத்துக்கு திறந்தவெளியாக உள்ளது. இதையடுத்து ஆண், பெண்களுக்கு என தனித்தனியாக கைதிகள் அறை வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களை சுற்றிலும் உயரமான சுவர் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஜெயிலில் பிரபல ரவுடிகளான மர்டர் மணிகண்டன், கர்ணா, புதுவை முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் கொலையில் கைதாகியுள்ள எழிலரசி மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள கைதிகள் என சுமார் 250 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

தப்பிச் செல்வதற்கோ சந்தித்து பேசுவதற்கோ நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஜெயில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜெயிலில் இருந்தபடியே தங்களது கூட்டாளிகள் மூலம் புதுவையில் உள்ள தொழில் அதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை மிரட்டி ரவுடிகள் பணம் பறித்ததாக புகார் கூறப்பட்டது. தங்களது கூட்டாளிகளுடன் செல்போன்களில் ரவுடிகள் எளிதில் தொடர்பு கொண்டு பேசுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதற்கு போலீசாரே உதவியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சிறையில் உள்ள ரவுடிகளின் கூட்டாளிகளை கண்காணித்து எச்சரித்தனர். அவர்களுக்கு உதவிய போலீசார் மீதும் நடவடிக்கை பாய்ந்தது. இதுமட்டுமின்றி முறைகேடாக சேர்க்கப்பட்ட ரவுடிகளின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் நிலைமை கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் மிகுந்த காலப்பட்டு சிறையில் ஒருவரை ஒருவர் சந்திக்கவே முடியாது என்ற நிலையில் ஆண், பெண் கைதிகள் சந்தித்து பேச ஜெயில் அதிகாரிகளே உடந்தையாக இருந்த விவகாரம் தற்போது விசுவரூபம் எடுத்துள்ளது.

அதாவது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியான மர்டர் மணிகண்டன், முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கொலையில் கைதான பெண் தாதா எழிலரசி ஆகியோர் ஜெயிலுக்குள் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது அவர்கள் தங்களது எதிரிகளை வெளியில் உள்ள கூட்டாளிகள் மூலம் தீர்த்துக்கட்டுவது என சதி திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்காக பெண் தாதாவிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு அதிகாரிகள் உடந்தையாக இருந்த தகவலும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இதுதொடர்பாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தினார்கள். இதில் ரவுடி மர்டர் மணிகண்டன், எழிலரசி ஆகியோர் சிறை வளாகத்தில் சந்தித்துப் பேசியது உறுதியானது. இந்த சந்திப்புக்கு உடந்தையாக இருந்ததாக ஜெயில் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், முதன்மை வார்டன் வீரவாசு, வார்டன்கள் பத்மநாபன், கலாவதி ஆகியோரை இடைநீக்கம் செய்து சிறை துறை ஐ.ஜி. பங்கஜகுமார் ஜா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். புதுவை மாநிலத்தின் மற்ற பிராந்தியங்களில் தங்கி இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கைதிகள் சந்திப்பினை ஏற்பாடு செய்த விவகாரத்தில் மேலும் 3 சிறை வார்டன்கள் உதவியதாக தற்போது தகவல்கள் கிடைத்து உள்ளன. இதனால் சிறைத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக சிறைத்துறை ஐ.ஜி. (பொறுப்பு) சக்திவேல் விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த தகவல் உறுதி செய்யப்படுமானால் அவர்களையும் பணியிடை நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புதுவை ஜெயிலில் ஆண், பெண் கைதிகள் சந்தித்துப் பேச அதிகாரிகளே உடந்தையாக இருந்த விவகாரத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.


Next Story