வீட்டில் பதுக்கி விற்பனை செய்த மதுபாட்டில்களை சூறையாடிய பெண்கள்; ஒருவர் கைது
அதியமான்கோட்டை அருகே வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்த மதுபாட்டில்களை பெண்கள் சூறையாடினர். மது பதுக்கி விற்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள ஆலிவாயன்கொட்டாயை சேர்ந்தவர் அருண் (வயது 37). இவருடைய வீட்டில் மது பதுக்கி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மது பிரியர்கள் பலர் மது குடித்துவிட்டு போதையில் ஆங்காங்கே அறைகுறை ஆடையுடன் படுத்து கிடக்கின்றனர். மேலும் தெருவில் செல்பவர்களை தகாத வார்த்தையால் திட்டி வந்தனர். இதனால் பொதுமக்கள் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.
மேலும் அருணிடம் சென்று இது போன்று மது பதுக்கி விற்பனை செய்ய வேண்டாம் என கூறி வந்தனர். ஆனால் அவர் அதை கேட்காமல் தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று அருணின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த மது பாட்டில்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் மதுபாட்டில்களை தெருவிற்கு கொண்டு வந்து தூக்கி எறிந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உதவி கலெக்டர் (கலால்) மல்லிகா, தாசில்தார் ஜெயலட்சுமி மற்றும் அதியமான்கோட்டை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மது பதுக்கி விற்ற அருணை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதே போல முக்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து (65) என்பவர் எட்டிமரத்துப்பட்டி என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கு சட்ட விரோதமாக மது பதுக்கி விற்பனை செய்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த வீட்டிற்கு சென்று முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் அங்கு சென்று பொதுமக்களை சமாதானம் செய்தனர். மேலும் முத்து பதுக்கி வைத்திருந்த மதுவை கொட்டி அழித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்துவை தேடி வருகின்றனர்.