“திருநங்கைகள் தங்களுக்கு தேவையான சட்ட உதவிகளை துணிச்சலோடு கேளுங்கள்” நீதிபதி பேச்சு


“திருநங்கைகள் தங்களுக்கு தேவையான சட்ட உதவிகளை துணிச்சலோடு கேளுங்கள்” நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 15 Oct 2017 4:30 AM IST (Updated: 14 Oct 2017 11:12 PM IST)
t-max-icont-min-icon

திருநங்கைகள் தங்களுக்கு தேவையான சட்ட உதவிகளை துணிச்சலோடு கேளுங்கள் என்று நீதிபதி ஜாண் ஆர்.டி. சந்தோசம் கூறினார்.

ஆரல்வாய்மொழி,

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருநங்கைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் வீரமார்த்தாண்டன்புதூர் திருநங்கைகள் காலனியில் நடைபெற்றது. முகாமுக்கு சமூக ஆர்வலர் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.

 திருநங்கை மோனிஷா வரவேற்று பேசினார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பசும்பொன் சண்முகையா கருத்துரை வழங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஜாண் ஆர்.டி. சந்தோசம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

மூன்றாம் பாலினத்தவரான உங்களுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்வதில் எங்கள் பங்கு உண்டு. சமூகத்தில் சிலர் அறியாமை காரணமாக உங்களை கடவுள் இட்ட சாபம் என கூறுகிறார்கள். எந்த பாவமோ இதில் இல்லை. கருவில் ஏற்பட்ட குறைபாடுதான், வருத்தப்பட வேண்டாம். இது உடல் கூறு சார்ந்த ஒரு விபத்து. வாழ்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டும்.

 நீங்கள் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. இன்றைக்கும் சமூகம் உங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மைதான். உங்கள் மீது சமூகம் சுமத்தும் அடையாளங்களை தூக்கி எரிய வேண்டும். ஒரு நாளும் சோர்ந்து போகாதீர்கள்.

 உங்களுக்கு சட்டரீதியாக மட்டுமல்ல வேறு எந்த உதவியானாலும் துணிச்சலோடு கேளுங்கள். நாங்கள் செய்ய தயாராக உள்ளோம். சட்ட தன்னார்வலர் பணிக்கு உங்களையும் சேர்க்க உள்ளேன். தகுதியுள்ளவர்கள் விண்ணப்பம் தாருங்கள்.

இவ்வாறு நீதிபதி ஜாண் ஆர்.டி. சந்தோசம் கூறினார்.  அதைத்தொடர்ந்து அவரிடம் திருநங்கைகள் மனுக்களை கொடுத்தனர்.


Related Tags :
Next Story