கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு


கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 15 Oct 2017 4:30 AM IST (Updated: 14 Oct 2017 11:27 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் ஆய்வு மேற்கொண்டார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 9 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் அங்கு 4 ஆண்களும், 2 பெண்களும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட டெங்கு ஒழிப்பு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் மற்றும் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் ஆகியோர் நேற்று மாலையில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் காய்ச்சல் வார்டு, குழந்தைகள் வார்டில் சிகிச்சை பெறுகிறவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். மேலும் அவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் கூறுகையில், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகம் தூய்மையாக உள்ளது. இதனை தொடர்ந்து தூய்மையாக பராமரிக்க வேண்டும். டெங்கு இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தண்ணீர் பாத்திரங்கள், தொட்டிகளை மூடி வைக்குமாறும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்குமாறும் பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.

மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லதா, கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா, அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story