பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை


பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 Oct 2017 4:30 AM IST (Updated: 15 Oct 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி எச்சரித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட மருத்துவத்துறையின் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பான சிகிச்சை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

தற்போது விஷகாய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில் உரிய சிகிச்சையை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். டாக்டர்கள் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் தங்கள் உதவியாளர் மூலம் காய்ச்சல் என்றைக்கு ஏற்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை விசாரிக்க வேண்டும். இந்த விவரத்தை டாக்டர்களிடம் தெரிவித்து நோயாளிக்கு தகுந்த சிகிச்சை அளித்தால் பூரண குணமடைய வசதியாக இருக்கும்.

ஒன்றிய, நகர அளவிலான மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர்கள், நோயாளிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி அவர்களிடம் நட்பாக பழகும்போது மன அழுத்தத்தில் உள்ள நோயாளிக்கு நோய் எளிதாக குணமாகும் நிலையை உணர்வார்கள். நோயாளிகள் மேல் சிகிச்சைக்கு செல்ல விரும்பினால் உடனடியாக தலைமை டாக்டர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சல் நான்கு கட்டநிலையில் தாக்குகின்றன. 1 முதல் 10 நாட்கள் கால அளவு எடுத்துக்கொள்கிறது. அதில் முதல் 5 நாட்கள் சிகிச்சையில் உடலில் உள்ள ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலே உடனடியாக உயர் சிகிச்சைக்கான வழியை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட அளவில் மருத்துவப்படிப்பு படிக்காமல் அனுபவ ரீதியாக சிகிச்சை வழங்கும் போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளன. எனவே போலி டாக்டர்களுக்கு யாரும் துணை போக வேண்டாம். இதுபோல் பொதுமக்களுக்கு காய்ச்சல் வருவதாக உணர்ந்தவுடன் அரசு டாக்டர்களை அணுக வேண்டும். அது இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் போது 2-ம் நாள் காய்ச்சல் விடுவதாக தெரியும். ஆனால் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு வருவது உங்களுக்கு தெரியாது. பிறகு திடீர் பாதிப்பு ஏற்படும் போது உயர் சிகிச்சை தேவைப்படுகிறது.

டாக்டர் ஆலோசனையின்றி மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது. மருந்துக்கடை சில்லரை விற்பனையாளர்கள் கட்டாயம் டாக்டர் பரிந்துரை சீட்டு பெற்று வரும்படி நோயாளிகளிடம் கூற வேண்டும். பொது சுகாதாரத்துறையின் மூலம் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு குடிக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில் இணை இயக்குனர் சவுந்தரராஜன் (மருத்துவம்), துணை இயக்குனர்(சுகாதாரம்) ஜெயந்தி, மருத்துவ சங்க தலைவர் நசீர், செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் செந்தில் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். 

Related Tags :
Next Story