சோளக்காட்டில் மயங்கி கிடந்த பெண் யானையை குட்டியுடன் சுற்றி வந்த யானை


சோளக்காட்டில் மயங்கி கிடந்த பெண் யானையை குட்டியுடன் சுற்றி வந்த யானை
x
தினத்தந்தி 15 Oct 2017 4:30 AM IST (Updated: 15 Oct 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே சோளக் காட்டில் மயங்கி கிடந்த யானையை குட்டியுடன் மற்றொரு யானை சுற்றி வந்தது. அவற்றை வனத்துக்குள் விரட்டியபிறகு, மயங்கிய யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.

பேரூர்,

கோவை அருகே தென்கரை பேரூராட்சி கரடிமடை கிராமம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்து உள்ளது. தற்போது பருவமழை பெய்ததால் அந்த பகுதி விவசாயிகள் சோளப்பயிர், பூசணிக்காய் பயிரிட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் 3 யானைகள் கரடிமடை கிராமத்தில் உள்ள விவசாய நிலத்துக்குள் புகுந்தன. அவை நீலியம்மன் கோவில் அருகே உள்ள சோளக் காட்டுக்குள் புகுந்து பயிர்களை தின்று சேதப்படுத்தின.

இதையடுத்து அருகே உள்ள தோட்டத்துக்குள் புகுந்து பூசணிக்காய்களை சாப்பிட்டன. பின்னர் அந்த 3 யானைகளும் சோளக்காட்டு பகுதியில் வந்து நின்றன. இதில் ஒரு பெண் யானை நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீரென்று மயங்கி விழுந்தது. அப்போது அங்கு குட்டியுடன், மற்றொரு பெண் யானை சுற்றி வந்தபடி பிளிறின.

இந்த நிலையில் நேற்று காலை தோட்டத்துக்கு சென்ற விவசாயிகள் யானைகள் பிளிறும் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர். அங்கு ஒரு யானை மயங்கி கிடப்பதும், அதன் அருகே குட்டியுடன், மற்றொரு பெண் யானை நின்று கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் தெரி வித்த தகவலின் பேரில் மதுக்கரை வனச்சரகர் செந்தில்குமார், கரடிமடை வனவர்கள் கண்ணன், சோழ மன்னன், வேட்டைத்தடுப்பு காவலர் தீத்திப்பாளையம் சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

ஆனால் அவர்களால் மயங்கி விழுந்து கிடந்த யானையின் அருகே செல்ல முடியாத அளவுக்கு குட்டியுடன் மற்றொரு யானை நின்று கொண்டு இருந்தது. எனவே குட்டியுடன் நின்ற யானையை வனப் பகுதிக்குள் விரட்ட முடிவு செய்தனர். அதன்படி பட்டாசு வெடித்து குட்டியுடன் நின்ற யானையை அங்கிருந்து விரட்ட போராடினர். ஆனால் அந்த 2 யானைகளும் அங்கிருந்து செல்லாமல், மயங்கி கிடந்த யானையை சுற்றி, சுற்றி வந்தன. இதனால் மயங்கி கிடந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி 2 யானைகளையும் அங்கிருந்து நீலியம்மன் கோவில் வரை விரட்டி சென்றனர். அங்கு ஒரு பொக்லைன் எந்திரத்தை நிறுத்தி அந்த 2 யானை களையும் வனத்துறையினர் கண்காணித்தனர்.

இதைத்தொடர்ந்து பூலுவப்பட்டி கால்நடை மருத்துவர் வெண்ணிலா, மாதம்பட்டி கால்நடை மருத்து வர் மோகன்வேலு ஆகியோர் யானை மயங்கி கிடந்த இடத்துக்கு சென்றனர். அவர்கள், மயங்கி கிடந்த யானைக்கு நீர்ச்சத்து கொடுப்பதற்காகவும், உடல் உஷ்ணத்தை தணிப்பதற்காகவும் தண்ணீரை அதன் மீது தெளித்தனர். அதன்பிறகு யானையின் 2 காதுகள் மற்றும் பின்னங்காலின் மேற்புறங்களிலும் ஊட்டச்சத்து ஊசி மற்றும் 40 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றி தீவிர சிகிச்சை அளித்தனர்.

அதன்பிறகும் அந்த யானை எழுந்திருக்க வில்லை. எனவே சாடிவயலில் இருந்து பாரி என்ற கும்கி யானை சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அந்த கும்கி யானை, காட்டு யானைகள் வருவதை தடுக்கும் வகையில் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பொக்லைன் எந்திரம் மூலம் மயங்கி கிடந்த பெண் யானையின் கால் அருகே 2 அடி ஆழத்துக்கு குழி தோண்டி தூக்கி விட முயன்றனர்.

அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கும் வகையில், மயங்கி கிடந்த பெண் யானை சிறிது நேரத்தில் கம்பீரமாக எழுந்து நின்றது. பின்னர் அந்த யானை ஆவேசமடைந்து பொக்லைன் எந்திரத்தை தள்ளி விட முயன்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காட்டு யானை எழுந்ததும், வேடிக்கை பார்க்க கூடி இருந்த பொதுமக்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர்.

சிறிது நேரம் போக்கு காட்டிய பெண் யானை பூசணிக்காய் தோட்டத்தின் வழியாக வனப்பகுதியை நோக்கி சென்றது. இந்த பணிகளை கோவை மண்டல வனபாதுகாவலர் ராமசுப்பிரமணியம், மாவட்ட வனஅலுவலர் சதீசும் நேரில் பார்வையிட் டனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், மயங்கி கிடந்த பெண் யானைக்கு 55 வயது இருக்கும். அதன் அருகே குட்டியுடன், 25 வயது மதிக்கத்தக்க பெண் யானையும் நின்றது. அந்த 3 யானைகளும் சோளக்காட்டிற்குள் புகுந்துள்ளது. முதுமை காரணமாகவும், நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவும் பெண் யானை மயங்கி கீழே விழுந்துள்ளது. அது எழுந்து நிற்பதற்கு தேவையான மருந்து, குளுக்கோஸ் கொடுத்தோம். இதனால் அந்த யானை எழுந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது என்றனர். 

Related Tags :
Next Story