மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தூய்மைக்கான விருது: 276 கோவில் ஊழியர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் பரிசு


மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தூய்மைக்கான விருது: 276 கோவில் ஊழியர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் பரிசு
x
தினத்தந்தி 15 Oct 2017 4:30 AM IST (Updated: 15 Oct 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தூய்மைக்கான விருது பெற காரணமாக இருந்த 276 ஊழியர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

மதுரை,

இந்திய அளவில் தூய்மையான தலங்களில் முதலிடத்திற்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பெற்றது. இதற்கு கோவிலில் துப்புரவு பணியை மேற்கொண்ட நிரந்தர மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரையும் பாராட்ட கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமி‌ஷனர் நடராஜன் ஆகியோர் முடிவு செய்தனர். அதன்படி ஊழியர்களை கவுரவிக்கும் வகையில் நேற்று காலை மீனாட்சி அம்மன் கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் பாராட்டு விழா நடந்தது.

விழாவிற்கு கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் வரவேற்றார். இதில் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு துப்புரவு ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசு பொருட்களை வழங்கினர்.

இதில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசும் போது கூறியதாவது:–

இந்தியாவில் உள்ள தூய்மையான 10 இடங்களை தேர்வு செய்ததில், தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முதலிடம் பெற்று அந்த விருதை பெற்றுள்ளது. இதற்காக கோவிலில் பணியாற்றும் துப்புரவு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தின் சார்பில் கோவிலில் துப்புரவு பணியை மேற்கொள்ளும் ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த விருது பெற காரணமாக இருந்த ஊழியர்களை பாராட்டி, அவர்கள் 276 பேருக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் வைகை ஆற்றில் மைய மண்டபம் ரூ.70 லட்சம் செலவில் சீரமைக்கப்பட உள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் கோவிலுக்குள் தண்ணீர் புகாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விழாவில் கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, ஏ.கே.போஸ், சரவணன், மாணிக்கம், பெரிய புள்ளான், நீதிபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோவில் இணை கமி‌ஷனர் நடராஜன் நன்றி கூறினார்.


Next Story