உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 15 Oct 2017 11:30 AM GMT (Updated: 15 Oct 2017 8:52 AM GMT)

அவள் பெற்றோருக்கு ஒரே மகள். செல்லமாக வளர்ந்தவள். பள்ளிப் பருவத்திலே நடனம், நாட்டியம் போன்றவைகளில் கலந்து கொண்டு பாராட்டுகளை வாங்கினாள்.

வள் பெற்றோருக்கு ஒரே மகள். செல்லமாக வளர்ந்தவள். பள்ளிப் பருவத்திலே நடனம், நாட்டியம் போன்றவைகளில் கலந்து கொண்டு பாராட்டுகளை வாங்கினாள். நன்றாக படித்து, எதிர்காலத்தில் ஆசிரியையாக வேண்டும் என்ற ஆசை அவளுக்கு இருந்தது. அதற்கான கல்வியை அவள் கற்றுக் கொண்டிருந்த போது பெற்றோர், மகள் டி.வி. தொடர்களில் நடித்தால் பணமும், புகழும் கிடைக்கும் என்று ஆசைப்பட்டார்கள். அதற்கான நபர்களை தொடர்புகொண்டார்கள்.

நாலைந்து டி.வி. தொடர்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு அவளுக்கு கிடைத்தது. அதில் ஓரளவே வருமானம் வந்துகொண்டிருந்தது. பெற்றோர் தங்கள் மகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்று விரும்பினார்கள். அதற்காக அந்த துறை தொடர்புடைய சிலரை சந்தித்து அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். இத்தகைய முயற்சிகளால் அவளது கல்வித் தடைபட்டது.

இந்த நிலையில் ஒரு டைரக்டர் முக்கிய கதாபாத்திரம் தருவதாகக் கூறி, ஸ்டோரி டிஸ்கஷனுக்காக ஓட்டலுக்கு அழைத்தார். அவள் தனது தந்தையோடு அங்கு சென்றாள். வெகு நேரம் இழுத்தடித்து, பல்வேறு கோணங் களில் அவளை படமெடுத்தார். ஒருகட்டத்தில் ஏதேதோ காரணங்களை கூறி அவளது தந்தையை தனிமைப்படுத்தினார். ‘உனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது’ என்று நம்பிக்கையூட்டி, எப்படி எல்லாமோ மூளைச்சலவை செய்து அந்த நபர் அவளை படுக்கைக்கு பயன்படுத்திக்கொண்டார்.

எப்படியாவது தனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துவிடும் என்று அவள் நம்பிக்கையோடு, கசப்பை ஜீரணித்துக்கொண்டு காத்திருந்தாள். அந்த நபர் பழைய மாவையே அரைத்துக்கொண்டிருக்கிறார் என்பதும், புதிய தொடரை தொடங்குவதற்கான வாய்ப்பு ஏதும் அவரை தேடிவரவில்லை என்பதும், அவளுக்கு வெகு தாமதமாகத்தான் தெரிந்தது.

மனமுடைந்து போனாள். மனஅழுத்தம் ஏற்பட்டது. தனது நெருக்கமான வசதிபடைத்த தோழி ஒருத்தியிடம் எல்லாவற்றையும் மனந்திறந்துகொட்டினாள். அழுதாள். ‘இனி கலைத்துறை தொடர்பே எனக்குத் தேவையில்லை. நான் அதற்கு முழுக்குப்போட்டுவிட்டு, விட்டுப்போன ஆசிரியப் பயிற்சியை தொடரப்போகிறேன்’ என்று கூறிவிட்டு, வெளியூருக்கு படிக்கச் சென்றாள்.

படித்துமுடித்துவிட்டு ஊர் திரும்பியவளுக்கு பக்கத்து நகரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை கிடைத்தது. அவள் பணியில் தொடர்ந்துகொண்டிருக்க பெற்றோர், அவளுக்கு மாப்பிள்ளை தேட விரும்பினார்கள். ஆனால், ஓட்டலில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் அவள் மனதில் மாறாத காயத்தை ஏற்படுத்தியிருந்தது. அதை மறக்க முடியாததால் வெவ்வேறு காரணங்களை கூறி திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தாள்.

வயது முப்பதை நெருங்கிவிட்டது. இனியும் திருமணத்தை தள்ளிப்போட்டால் கல்யாண வாழ்க்கையே இல்லாமல் போய் விடும் என்ற நிலையில் கடைசியாக ஒரு வரனுக்கு சம்மதித்தாள். நிச்சயதார்த்தத்திற்கு முன்பு அவனை சந்தித்து பேசவும் செய்தாள். அப்போது ‘அந்த ஓட்டல் சம்பவம்’ தவிர மீதி அனைத்தையும் சொன்னாள். அவனுக்கும் அவளை பிடித்திருந்திருந்தது.

கல்யாணம் நடந்தது. முதலிரவில் அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மதுப் பழக்கமே இல்லாத அவன், முதலிரவு அறையில் அவள் முன்னால் வைத்து மது அருந்தினான். அவள் கலங்கிய கண்களோடு பார்க்க, தான் மது அருந்த அவள்தான் காரணம் என்றான்.

அவள் நிலைகுலைந்துபோய் நிற்க, ‘உன் தோழி என்னை ஒருதலையாக காதலித்தாள். பணம், செல்வாக்கு எல்லாவற்றையும் காட்டி என்னை வளைத்துப்போட முயற்சித்தாள். நான் நிராகரித்துவிட்டு, உன்னை திருமணம் செய்துகொள்ளப்போகும் தகவலை அவளிடம் சொன்னேன். அப்போதுதான் நீ ஓட்டலில் எவனிடமோ உன்னை இழந்த கதையை என்னிடம் சொல்லிவிட்டு, ‘சோரம் போனவள்தான் உனக்கு லாயக்கு. அவளையே திருமணம் செய்துகொள்..’ என்று ஆத்திரத்தில் பேசினாள். என்னால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்னசெய்வதென்றும் எனக்கு தெரியவில்லை. அதனால்தான் இன்று முதல்முறையாக குடிக்கிறேன்’ என்றான். அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று அவளுக்கும் தெரியவில்லை.

திருமணம் நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. விலகவும் மனமின்றி, சேரவும் முடியாமல் கண்ணீரோடு நாட்களை நகர்த்திக்கொண்டிருக் கிறார்கள்.

தோழிகளிடம் மனம்விட்டு எல்லாவற்றையும் கொட்டக்கூடாது என்பதற்காக இந்த சம்பவம்..!

- உஷாரு வரும். 

Next Story