பசுக்களை காப்பாற்றும் ‘ஜெர்மன் மாதாஜி’


பசுக்களை காப்பாற்றும் ‘ஜெர்மன் மாதாஜி’
x
தினத்தந்தி 15 Oct 2017 9:15 AM GMT (Updated: 15 Oct 2017 9:15 AM GMT)

59 வயது பெண்மணியான இவரால், இதுவரை 1200 பசுக்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.

59 வயது பெண்மணியான இவரால், இதுவரை 1200 பசுக்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. இவர் இந்தியரல்ல, ஜெர்மானியர். பிரீடெரிக் இரினா பிரன்னிங் என்ற இந்த பெண்மணி உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் தற்போது வசிக் கிறார்.

“நான் ஒரு சுற்றுலாப் பயணியாகத்தான் இந்தியாவுக்கு வந்தேன். நாம் ஆன்மரீதியாக முன்னேற்றம் அடைய ஒரு குரு தேவை என்பதை இங்கு உணர்ந்தேன். அப்படிப்பட்ட ஒரு குருவைத் தேடித்தான் நான் மதுராவின் ராதா குண்ட் சென்றேன். அங்குதான் எனது வாழ்க்கை மாறியது” என்று முன்னுரை கொடுக்கிறார், இரினா.

“ஆரம்பத்தில் நான் பக்கத்தில் வசித்த ஒருவரின் ஆலோசனையின்படி ஒரு பசுவை வாங்கினேன். அப்போதுதான், வயதாகி, பால் கொடுப்பதை நிறுத்திவிட்ட பசுக்களை மக்கள் அனாதையாக விட்டு விடுவதைக் கண்டேன். அவற்றையெல்லாம் நான், ‘சுரபி கோசேவா நிகேதன்’ என்ற கோசாலை அமைத்துப் பராமரிக்கத் தொடங்கினேன். இப்போது என்னிடம் 1200 பசுக்களும், கன்றுக்குட்டிகளும் இருக்கின்றன. இதற்குமேல் இங்கு பசுக்களை வைத்திருக்க முடியாது. ஆனாலும் இன்றும் என் கோசாலை முன்பு யாராவது நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த பசுக்களை விட்டுச்செல்லும்போது என்னால் அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை” என்கிறார், கருணை பொங்க.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுக்களுக்கான தீவனங்கள், மருந்துகள் மற்றும் பணியாளர்களுக்கான சம்பளம் என்று இரினாவுக்கு ஒவ்வொரு மாதமும் 22 லட்ச ரூபாய் தேவைப்படுகிறதாம். அந்தச் செலவை எப்படிச் சமாளிக்கிறார்?

“ஜெர்மனியில் எனக்குச் சில சொத்துகள் இருக்கின்றன. அவற்றில் இருந்து வருமானம் வருகிறது. ஆரம்பத்தில் எனது தந்தையும் எனக்குக் கொஞ்சம் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார். தற்போது அவருக்கு வயதாகிவிட்டதால் பணம் தர முடியவில்லை. மற்றபடி, உள்ளூர் அரசு அதிகாரிகள் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஆனாலும்கூட நான் எப்படியோ சமாளித்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் சாதாரணமாக.

இவரது கோசாலையில், சிறப்புக் கவனிப்பு தேவைப்படும் பசுக் களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

“என்னால் இந்தக் கோசாலையை மூட முடியாது. இந்தப் பசுக்களை ‘அம்போ’ என்று விட முடியாது என்பதுடன், இதில் 60 பேர் பணிபுரிகிறார்கள். அவர்களை நம்பி அவர்களது குடும்பமும், குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி தங்கள் குழந்தைகளை அக்கறையாகக் கவனிப்பார்களோ, அப்படி நான் என் குழந்தைகளாகிய பசுக் களையும், கன்றுகளையும் கவனித்துக்கொள்கிறேன்” என்கிறார் புன்னகையுடன்.

பசுக்களை நேசிக்கும் ஜெர்மானியப் பெண்மணி இரினாவை இப்போது உள்ளூர் மக்கள், ‘சுதேவி மாதாஜி’ என்று அன்போடு அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 

Next Story