கடனை அடைக்க நாடகம் ஆடியது அம்பலம் நிதி நிறுவன ஊழியர் நண்பருடன் கைது


கடனை அடைக்க நாடகம் ஆடியது அம்பலம் நிதி நிறுவன ஊழியர் நண்பருடன் கைது
x
தினத்தந்தி 16 Oct 2017 7:00 AM IST (Updated: 16 Oct 2017 1:02 AM IST)
t-max-icont-min-icon

நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.17 லட்சம் வழிப்பறி நடந்த வழக்கில், கடனை அடைக்க அவரே வழிப்பறி நாடகம் ஆடியது அம்பலானது.

செங்குன்றம்,

இதையடுத்து நிதி நிறுவன ஊழியர் மற்றும் உடந்தையாக இருந்த அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் சிருவானூர் பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவசக்தி(வயது 29). இவர், மீஞ்சூரில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். மகளிர் சுய உதவி குழுக்களிடம் இருந்து வசூலாகும் பணத்தை வங்கியில் செலுத்துவது இவருடைய வேலை.

கடந்த வெள்ளிக்கிழமை வசூலான ரூ.17 லட்சத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு மீஞ்சூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்றார். செங்குன்றம் அருகே ஆட்டந்தாங்கல் 400 அடி சாலையில் வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மஆசாமிகள், தன்னை வழிமறித்து ரூ.17 லட்சத்தை வழிப்பறி செய்து விட்டதாக சோழவரம் போலீசில் சிவசக்தி புகார் செய்தார்.

பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சப்–இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த தண்ணீர் கம்பெனி ஒன்றில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

ஆனால் அதில், சிவசக்தி கூறியது போல் அந்த நேரத்தில் வழிப்பறி நடந்ததற்கான எந்த காட்சிகளும் பதிவாகவில்லை. இதனால் சிவசக்தி மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவரை துருவி துருவி விசாரணை நடத்தினர். அதில் அவர், ரூ.17 லட்சம் பணத்தை மர்மநபர்கள் வழிப்பறி செய்ததாக நாடகம் ஆடியது அம்பலமானது.

போலீசாரிடம் சிவசக்தி அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–

எனக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் கடன் இருந்தது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு தொந்தரவு செய்ததால் ரூ.17 லட்சம் பணத்தை மர்மநபர்கள் வழிப்பறி செய்து விட்டதாக நாடகமாடி, அந்த பணத்தை வைத்து பாதி கடனை அடைத்து விடலாம் என்று முடிவு செய்தேன்.

அதன்படி வெள்ளிக்கிழமை பணத்தை எடுத்துக்கொண்டு ஆவடி எஸ்.எம்.நகரில் உள்ள எனது நண்பர் மதன்(28) என்பவரிடம் கொடுத்துவிட்டு செங்குன்றம் வழியாக ஆட்டந்தாங்கல் வந்தேன். அங்கு மர்மஆசாமிகள் என்னை வழிமறித்து பணத்தை பறித்து சென்று விட்டதாக சோழவரம் போலீசில் பொய் புகார் கொடுத்தேன். போலீசார் நடத்திய விசாரணையில் நான் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து சோழவரம் போலீசார் ரூ.17 லட்சம் வழிப்பறி நடந்ததாக நாடகம் ஆடிய சிவசக்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய நண்பர் மதன் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

பின்னர் கைதான இருவரும் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான மதனின் மனைவி, சென்னையில் பெண் போலீசாக வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story