கேரளாவை போன்று கர்நாடக கோவில்களிலும் தலித்துக்கள் அர்ச்சகர்களாக நியமனம்


கேரளாவை போன்று கர்நாடக கோவில்களிலும் தலித்துக்கள் அர்ச்சகர்களாக நியமனம்
x
தினத்தந்தி 16 Oct 2017 5:00 AM IST (Updated: 16 Oct 2017 3:11 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவை போன்று கர்நாடக கோவில்களிலும் தலித்துக்கள் அர்ச்சகர்களாக விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

மைசூரு,

2 நாட்கள் சுற்றுப்பயணமாக முதல்–மந்திரி சித்தராமையா நேற்று மைசூருவுக்கு வருகை தந்தார். பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மைசூருவுக்கு வருகை தந்த அவர் மண்டஹள்ளி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

எனக்கு அரசியல் வாழ்வு கொடுத்த சாமுண்டீசுவரி தொகுதியில் கடந்த தேர்தலின் போது என்னை தோற்கடிக்க பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சி முயற்சி செய்தன. ஆனால் சாமுண்டீசுவரி தொகுதி மக்கள் என்னை கைவிடாமல் வெற்றி பெற செய்தனர். யார் என்ன கூட்டுச்சதி செய்தாலும் சரி, என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

மாநில அரசின் கஜானா காலியாக உள்ளதாகவும், நான் விதான சவுதாவை அடகு வைத்து இருக்கிறேன் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார். எடியூரப்பா கர்நாடக முதல்–மந்திரியாக இருந்து 3 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளார். ஆனால் அவருக்கு பொருளாதாரத்தை பற்றி ஒன்றும் தெரியாது.

பா.ஜனதா ஆட்சியில் இருந்த போது வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கொள்ளையடித்ததே அவர்களின் சாதனையாகும். பா.ஜனதாவினர் மாநில அரசுக்கு எதிராக நடத்தும் போராட்டங்கள், பேரணிகளால் மக்கள் மனம் மாற மாட்டார்கள். அவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. விதான சவுதாவை நான் அடகு வைத்ததாக எடியூரப்பா கூறியுள்ளது அறிவு இல்லாதவர்கள் பேசும் பேச்சு. மக்களுக்கு சொந்தமான விதானசவுதாவை அடகு வைக்க முடியுமா?

பெங்களூரு நகரத்தின் அழகான கட்டிடங்களின் ஒன்றான விதானசவுதாவில் இந்த ஆண்டு வைரவிழா கொண்டாடப்படுகிறது. இந்த வைரவிழாவில் எம்.எல்.ஏ.க்களுக்கு நினைவு பரிசாக தங்க நாணயம், மேல்–சபை உறுப்பினர்களுக்கு வெள்ளி தட்டுகளை பரிசாக வழங்க உள்ளதாக சபாநாயகர் கே.பி.கோலிவாட் கூறி உள்ளார். இதுபற்றி எனக்கு தெரியாது. தங்க நாணயம், வெள்ளி தட்டுகள் வழங்குவது பற்றி அவர் தான் முடிவு செய்வார்.

இதற்காக சபாநாயகரிடம் இருந்து எனக்கு மனு வரவில்லை. ஒருவேளை அவரிடம் இருந்து மனு வந்தால் தங்க நாணயம், வெள்ளி தட்டுகள் வழங்குவது பற்றி பேசி முடிவு எடுக்கப்படும். கேரள அரசு பிராமணர்கள் அல்லாத தலித்துக்களை கோவில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்து உள்ளது.

அதேப்போல் கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான கோவில்களில் தலித்துக்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. கேரளாவை போன்று கர்நாடகத்திலும் அரசுக்கு சொந்தமான கோவில்களில் தலித்துக்கள் அர்ச்சகர்களாக விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story