அதிகாரிகளின் அலட்சியத்தால் நொய்யலில் தொடர்ந்து சாயக்கழிவுகளை திறந்து விடும் நிறுவனங்கள்


அதிகாரிகளின் அலட்சியத்தால் நொய்யலில் தொடர்ந்து சாயக்கழிவுகளை திறந்து விடும் நிறுவனங்கள்
x
தினத்தந்தி 15 Oct 2017 10:45 PM GMT (Updated: 15 Oct 2017 9:50 PM GMT)

நொய்யல் ஆற்றில் தொடர்ந்து சாயக்கழிவுகளை திறந்து விடும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக நொய்யல் ஆறு இருந்து வந்தது. இந்த ஆறு தற்போது சாக்கடை கழிவு நீர் ஓடும் ஆறாக மாறியுள்ளது. சாய ஆலைகளின் பெருக்கமே இதற்கு காரணமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நொய்யல் ஆறு, சங்கிலி பள்ளம் ஓடை, ஜம்மனை ஓடை, உள்ளிட்ட நீர் நிலைகளில் முறைகேடாக சாய்கழிவுகளை கலக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நொய்யலின் துணை ஓடையான மந்திரி வாய்க்காலில் சாயக்கழிவு நீர் கலந்து வந்தது.

ஒருபுறம் நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு புறம் ஆற்றில் சாயக்கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் நேற்று முன்தினம் திருப்பூர் ஷெரீப் காலனியை அடுத்த குறிஞ்சி நகரில் பாதாள சாக்கடை திட்ட பகுதியில் இருந்து சிவப்பு நிறத்தில் சாயக்கழிவுநீர் வெளியேறியது. பல மணி நேரமாக, பல ஆயிரம் லிட்டர் சாயக்கழிவு நீர் வெளியேறியது. இது அந்த பகுதி பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கழிவுநீர் ஓடை வழியாக நொய்யலில் வந்து கலந்தது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:-

திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த ஒரு சில வாரங்களாக தொடர்ந்து சாயக்கழிவுநீரை நிறுவனத்தினர் திறந்து விட்டு வருகின்றனர். முறைகேடாக இயங்கும் சாய ஆலை அல்லது அனுமதி பெறாமல் இயங்கும் ஆலையில் இருந்தே இந்த சாயக்கழிவுநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. கடந்த 7-ந்தேதி பெய்த மழையில் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கை பயன்படுத்தி மாணிக்காபுரம் பகுதியில் உள்ள பொதுசுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சாயக்கழிவு நீர் திறந்து விடப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சாயக்கழிவுநீரை திறந்து விட்டதாக கூறி அங்குள்ள பொதுசுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதனோடு தொடர்புடைய சாயஆலைகளையும் சீல் வைத்தனர்.

இதைத்தொடர்ந்து ஓரிரு நாட்கள் சாயக்கழிவுநீர் பிரச்சினை இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் சாய கழிவுநீரை நொய்யலில் பலர் திறந்து விட்டு வருகின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு பகுதியில் இயங்கும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாலேயே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும், மாநகராட்சி சார்பில் கழிவுநீரும் அதிக அளவு நொய்யலில் கலக்கப்பட்டு வருகிறது.

சாயக்கழிவுநீர் திறந்து விடப்படுவதும், அந்த தகவல்கள் தெரியவரும் போது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று அந்த நிறுவனங்களுக்கு சீல் வைப்பதும், பின்னர் ஓரிரு நாட்களில் அவற்றை மீண்டும் திறப்பது என்பது வாடிக்கையாகி விட்டது. முறைகேடாக சாய நீரை வெளியேற்றும் நிறுவனங்களாக இருந்தாலும், அனுமதியின்றி இயங்கும் நிறுவனங்களாக இருந்தாலும் தவறும் பட்சத்தில் அவை மீண்டும் செயல்படாத நிலைக்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு அச்சம் ஏற்படும். திருப்பூரில் உள்ள நீர் நிலைகளில் பல எச்சரிக்கைகளையும் மீறி சாயக்கழிவுநீர் கலப்பது என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. சிறிய அளவிலான வீடுகள், மறைவிடங்களில் வைத்து முறைகேடாக சாய பட்டறைகள் செயல்பட்டு வருவதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

முறைகேடு சாய ஆலைகள் குறித்து அதிகாரிகள் விசாரித்து அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் கொண்ட தனிக்குழுவை அமைத்து செயல்பட வேண்டும். முறைகேடாக இயங்கும் சாய ஆலைகளை கண்டறிவதோடு, சாய ஆலைகளை இடித்து, மின் இணைப்பை துண்டித்து உரிமையார்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மட்டுமே சாயக்கழிவுநீர் வெளியேற்றுவதை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி இளங்குமரன் கூறியதாவது:-

மாநகருக்குட்பட்ட பல பகுதிகளில் வீடுகள், தனி அறைகள், மாடிப்பகுதிகளில் வைத்து சிறிய அளவிலான ‘ஜிப்’, ‘பட்டன்’ உள்ளிட்டவற்றை சாயமேற்றும் நிறுவனங்கள் அதிக அளவு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் இருந்தே சட்ட விரோதமாக சாயக்கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. பெரிய நிறுவனங்களில் இருந்து பெரும்பாலும் திறந்து விடப்படுவதில்லை. ஒருவேளை அவர்கள் திறந்து விடும் பட்சத்தில் ஒட்டு மொத்த வர்த்தகத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பெரிய நிறுவனங்கள் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது இல்லை.

இரவு நேர ரோந்து பணிகள் மேற்கொண்டு சிறிய அளவில் செயல்பட்டு, சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் நிறுவனங்களை அவ்வப்போது கண்டறிந்து ‘சீல்’ வைக்கிறோம். இருப்பினும், சிறிய அளவிலான அறைகளில் எங்கோ ஒரு மூலையில் செயல்படுவதால் அவைகளை கண்டறிவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். என்றால் முழுமையாக கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story
  • chat