திருச்செங்கோடு அருகே பயங்கரம்: கூட்டுறவு சங்க காவலாளியை கொன்று, கொள்ளை முயற்சி


திருச்செங்கோடு அருகே பயங்கரம்: கூட்டுறவு சங்க காவலாளியை கொன்று, கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 16 Oct 2017 4:45 AM IST (Updated: 16 Oct 2017 3:24 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோடு அருகே கூட்டுறவு சங்க காவலாளியை கொன்று கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதில் 2,119 பவுன் நகை தப்பியது. இது தொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வையப்பமலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக செந்தில் என்பவரும், செயலாளராக ராமசாமி என்பவரும் உள்ளனர். இந்த சங்கத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சங்கத்தில் 2,119 பவுன் நகைகளை அடகு வைத்து உறுப்பினர்கள் சுமார் ரூ.2½ கோடி வரை கடன் பெற்று உள்ளனர். இந்த நகைகள் இங்குள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. பெட்டகத்திற்கு பாதுகாப்பாக அலாரம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

இந்த கடன் சங்கத்தின் இரவு காவலாளியாக ராசிபுரத்தில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த பெரியசாமி (வயது 45) என்பவர் கடந்த 6 மாதமாக வேலை செய்து வந்தார். ராமாபுரத்தை சேர்ந்த இவருக்கு கோகிலா என்ற மனைவியும், 9-ம் வகுப்பு படிக்கும் கவுதம் (14) என்ற மகனும் உள்ளனர்.

பெரியசாமி நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இரவு காவல் பணியில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை கடன் சங்க தலைவர் செந்தில் சங்கத்திற்கு வந்து பார்த்தபோது, காவலாளி பெரியசாமியை காணவில்லை. மேலும் சங்கத்தின் முன்புறத்தில் உள்ள கதவு திறந்து இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்த அவர், சங்க வளாகத்தின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது சங்கத்தின் பின்புறத்தில் காவலாளி பெரியசாமி ஒரு போர்வையால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில், உடனடியாக எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவும் அங்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

போலீசார் கடன் சங்கத்தின் உள்ளே சென்று பார்த்தபோது, லாக்கரை உடைக்க முயற்சித்திருப்பது தெரியவந்தது. எனவே, மர்ம ஆசாமிகள் பெரியசாமியை கொன்று சங்கத்தில் கொள்ளையடிக்க முயன்று இருப்பது தெரியவந்தது. கம்பியால் வேகமாக அடிக்காமல் நெம்பி லாக்கரை திறக்க முயற்சித்ததால் அலாரம் அடிக்கவில்லை. எனவே, பணம் மற்றும் நகைகள் கொள்ளை போகவில்லை என போலீசார் தெரிவித்தனர். வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த 2,119 பவுன் நகைகள் தப்பின. அதேபோல் வங்கியில் இருந்த ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 523-ம் தப்பியது.

சங்கத்தின் வெளிப்பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லை. உள்பகுதியில் கண்காணிப்பு கேமரா இருந்தும் வேலை செய்யாததால் கொள்ளையர்கள் யார்? என்பதை உடனடியாக அறிய முடியவில்லை. இதையடுத்து மோப்பநாய் பொய்கை வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் பொய்கை சம்பவ இடத்தில் இருந்து வையப்பமலை செல்லும் ரோட்டில் சுமார் அரை கி.மீ. தூரம் வரை ஓடிச்சென்று நின்று விட்டது.

இந்த கொலை, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி, துணை சூப்பிரண்டுகள் திருச்செங்கோடு ராஜீ, ராசிபுரம் ஈஸ்வரன், பரமத்தி சுஜாதா ஆகியோர் மேற்பார்வையில் திருச்செங்கோடு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மோகன், ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், வேலகவுண்டன்பட்டி இன்ஸ்பெக்டர் கைலாசம் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கூட்டுறவு சங்க காவலாளியை கொன்று கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :
Next Story