மலைஉச்சியில் உள்ள நல்லேந்திரபெருமாள் கோவிலில் கிரிவலம் சென்ற போது தவறி விழுந்த பக்தரின் உடல் மீட்பு


மலைஉச்சியில் உள்ள நல்லேந்திரபெருமாள் கோவிலில் கிரிவலம் சென்ற போது தவறி விழுந்த பக்தரின் உடல் மீட்பு
x
தினத்தந்தி 15 Oct 2017 11:15 PM GMT (Updated: 15 Oct 2017 9:54 PM GMT)

மலை உச்சியில் உள்ள தலைமலை நல்லேந்திரபெருமாள் கோவிலில் கிரிவலம் சென்றபோது தவறி விழுந்த பக்தர் உடல் நேற்று மீட்கப்பட்டது. கரடு, முரடான மலைப்பாதையில் இருந்து சுமந்து வந்தனர்.

தா.பேட்டை,

திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த நீலியாம்பட்டி கிராமத்தில் தலைமலை அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில், தரையில் இருந்து ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் நல்லேந்திரபெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமையும், தொன்மையும் வாய்ந்த இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

தலைமலை பெருமாளை வணங்க செல்லும் பக்தர்கள் கிரிவலம் சென்று நேர்த்திக்கடன் செலுத்துவது மிகவும் சிறப்பானதாகும். நினைத்த காரியம் நிறைவேறிய பக்தர்கள், கோவிலை சுற்றி சுமார் 2 அங்குலமே உள்ள விளிம்பில் கிரிவலம் செல்வார்கள். அதை பார்க்கும்போது மெய்சிலிர்க்கும். அவ்வாறு செல்லும்போது ஆயிரக்கணக்கான அடி உள்ள பள்ளத்தில் தவறி கீழே விழுந்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்நிலையில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்றுமுன்தினம் காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அப்போது மலை உச்சிக்கு சென்று பெருமாளை வழிபட்ட பக்தர் ஒருவர், இரண்டு முறை கிரிவலம் சுற்றி விட்டு, மூன்றாவது முறையாக சுற்றும்போது தவறி கீழே விழுந்தார். இதனைக்கண்ட மற்ற பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கீழே விழுந்தவர் திருச்சி மாவட்டம் முசிறி பெரியார் நகரை சேர்ந்த தங்கராஜின் மகன் ஆறுமுகம் (வயது 38) என்பதும், சரக்கு ஆட்டோ டிரைவரான ஆறுமுகத்துக்கு திருமணமாகி தாரா என்கிற மனைவி உள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாததால், குழந்தை பாக்கியம் வேண்டி அவர் கிரிவலம் சென்றபோது தவறி விழுந்தார். இந்நிலையில் ஆயிரக்கணக்கான அடி பள்ளத்தில் அவர் விழுந்ததால், எந்த இடத்தில் விழுந்தார் என்றும், அவரது கதி என்ன என்றும் தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் நாமக்கல் அருகே ராசிபுரத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான அலுவலகத்தில் உள்ள சேட்டிலைட் மூலம் மலைப்பகுதி முழுவதும் கண்காணித்தனர். அப்போது மலைக்கு பின்புறம் உள்ள செவந்திப்பட்டி கிராமத்தில் ஒத்தரசு என்ற மலையடிவாரத்தில் ஒருவரது உடல் கிடப்பது தெரிந்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், 6 வீரர்கள் மற்றும் உறவினர்கள் அந்த இடத்திற்கு செல்ல முற்பட்டபோது, அங்கு எந்த வழியாக செல்வது எனதெரியவில்லை. இதனையடுத்து கிராம மக்கள் உதவியுடன் செடி, கொடிகளை அகற்றி கரடு, முரடான பாதையில் மலை மீது ஏறி சென்றனர்.

மலையில் ஏற சிரமமாக இருந்ததால் தீயணைப்பு வீரர் ஒருவரும், ஆறுமுகத்தின் உறவினர்களும், கிராம மக்கள் சிலரும் சென்றனர். மலையில் ஏறி உடல் கிடந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது, இறந்து கிடந்தது ஆறுமுகம் என தெரியவந்தது. அவரது உடலில் பல இடங்களில் காயம் இருந்தது. கிரிவல பாதையில் இருந்து தவறி விழுந்ததில் அவரது உடல் மலைமீது பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் பல இடங்களில் காயம் ஏற்பட்டு இறந்துள்ளார்.

மலையில் இருந்து ஆயிரக்கணக்கான அடி உயர பள்ளத்தில் அவரது உடல் கிடந்ததால், உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. மலை மீது மோதியதில் ஆறுமுகத்தின் உடலில் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததால் அவரது உடலை பாலித்தீன் கவரால் சுற்றி கட்டி தூக்கி வந்தனர். மலைப்பாதை கரடு, முரடாக இருந்ததால் உடலை எளிதில் கொண்டுவர முடியவில்லை. இந்நிலையில் உடலை தூக்கிவர போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் உதவவில்லை என்று ஆறுமுகத்தின் உறவினர்கள் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவித்தனர்.

அதன்பின் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருள்அரசு உத்தரவின் பேரில், எருமப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்பட 8 பேர் சென்று ஆறுமுகத்தின் உடலை தூக்கிவர உதவி செய்தனர். மதியம் 12.30 மணிக்கு ஆறுமுகம் உடல் கிடந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவரது உடல் மாலை 6.45 மணி அளவில் தான் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆறுமுகத்தின் உடலை பார்த்து, அவரது மனைவி தாரா மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. 

Related Tags :
Next Story