குமரி மாவட்டத்தில் பலத்த மழை: அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 76 மி.மீ. பதிவு


குமரி மாவட்டத்தில் பலத்த மழை: அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 76 மி.மீ. பதிவு
x
தினத்தந்தி 16 Oct 2017 4:15 AM IST (Updated: 16 Oct 2017 3:24 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையில் அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 76 மி.மீ. பதிவாகி இருந்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இந்த மழை அதிகபட்சமாக முள்ளங்கினாவிளை பகுதியில் 76 மி.மீ. பதிவாகியிருந்தது. இதுபோல மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–

நாகர்கோவில்– 49.2, இரணியல்– 57, ஆனைகிடங்கு– 48.6, குளச்சல்– 64.6, அடையாமடை– 42, கோழிப்போர்விளை– 70.5, புத்தன்அணை 28.6, திற்பரப்பு– 34, பூதப்பாண்டி– 28.2, சுருளோடு– 32.4, கன்னிமார்– 26.2, ஆரல்வாய்மொழி– 12, பாலமோர்– 39.6, மயிலாடி– 29, கொட்டாரம்– 24.6 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.

இதுபோல அணை பகுதிகளில், பேச்சிப்பாறை– 21, பெருஞ்சாணி– 27.8, சிற்றாறு 1– 26.6, சிற்றாறு 2– 22, மாம்பழத்துறையாறு– 50 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

குமரி மேற்கு மாவட்டத்தில் மார்த்தாண்டம், குலசேகரம், ஆற்றூர், களியக்காவிளை, திருவட்டார், அருமனை, பேச்சிப்பாறை, கருங்கல் போன்ற பகுதிகளில் நேற்று அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

மார்த்தாண்டத்தில் தற்போது மேம்பால பணிகள் நடந்து வருவதால் வெட்டுமணி பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், வெட்டுமணியில் இருந்து குழித்துறைக்கு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தாமிரபரணி ஆற்றில் உள்ள தடுப்பணை வழியாக சென்று வந்தனர். தற்போது, ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் தடுப்பணை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக தடுப்பணை மீது இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்காக தடுப்பணை நுழைவு பகுதி கம்பியால் அடைக்கப்பட்டு இருந்தது. 

மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. அதாவது பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் 596 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. ஆனால் நேற்று நீர்வரத்து அதிகரித்து 728 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இதுபோல 498 கனஅடி வீதம் தண்ணீர் வந்த பெருஞ்சாணி அணைக்கு 604 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. இதைப்போன்று சிற்றாறு 1 அணைக்கு 82 கனஅடி வீதமும், சிற்றாறு 2 அணைக்கு 50 கனஅடி வீதமும், மாம்பழத்துறையாறு அணைக்கு 4 கனஅடி வீதமும் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. மழை பொழிந்ததால் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது பேச்சிப்பாறை அணையில் இருந்து 700 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் தற்போது இது 604 கனஅடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல 301 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்ட பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று 248 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும், சிற்றாறு 1 அணையில் இருந்து 50 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Related Tags :
Next Story