ஈரோடு மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது


ஈரோடு மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 15 Oct 2017 11:01 PM GMT (Updated: 15 Oct 2017 11:01 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளிகள் வாங்க வந்ததால் ஈரோடு மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஈரோடு,

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜவுளி, பட்டாசுகளின் விற்பனை கடந்த சில தினங்களாக நடந்து வந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஈரோடு மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ஜவுளி கடைகள் அதிகம் உள்ள ஈரோடு ஆர்.கே.வி.ரோடு, நேதாஜிரோடு, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீர்செல்வம் பூங்கா, திருவேங்கடசாமிவீதி, மேட்டூர்ரோடு ஆகிய இடங்களில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ஜவுளிகள் மட்டும் அல்லாமல் புதிய பொருட்களையும் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கினார்கள். இதனால் ஷோரூம்களில் செல்போன், டி.வி., பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் வாங்க கூட்டம் நிரம்பி வழிந்தது. பொருட்களை வாங்குவதற் காக பொதுமக்கள் அதிகமாக கூடியதால் ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்த போதிலும் இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கடைவீதிகளில் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாநகரில் திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆர்.கே.வி.ரோடு, மணிக் கூண்டு உள்ளிட்ட இடங்களில் போலீசார் நின்றுகொண்டு போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தினர். மேலும் போக்குவரத்து போலீசார் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கவில்லை. இதேபோல் மாநகர் பகுதியில் 11 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதன்மீது போலீசார் ஏறி நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாநகரில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ளது. இதனால் சாலைகளில் நடக்கும் சம்பவங்களை கட்டுப்பாட்டு அறையில் உள்ள போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள்.

Next Story