டெங்கு பரவும் விதம், தடுப்பு முறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் கலெக்டர் வலியுறுத்தல்


டெங்கு பரவும் விதம், தடுப்பு முறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்  கலெக்டர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Oct 2017 9:30 PM GMT (Updated: 16 Oct 2017 3:12 PM GMT)

டெங்கு பரவும் விதம், தடுப்பு முறைகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.

தென்காசி,

டெங்கு பரவும் விதம், தடுப்பு முறைகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.

விழிப்புணர்வு கருத்தரங்கம்

தென்காசி கல்வி மாவட்ட அளவில் அரசு பள்ளிகள், அரசுதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம், இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். தென்காசி உதவி கலெக்டர் ராஜேந்திரன், சங்கரன்கோவில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் மோகனகிருஷ்ணன் வரவேற்றார். தென்காசி கல்வி மாவட்டத்தை சேர்ந்த மெட்ரிக், அரசு பள்ளி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:–

தமிழகத்தில் டெங்கு என்ற போர் நடந்து வருகிறது. இதனை தடுப்பதற்காக அனைத்து துறைகள் சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே ஒட்டுமொத்த சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். டெங்கு கொசுப்புழு நல்ல தண்ணீரில் தான் உருவாகிறது. டெங்கு உருவாகும் விதம், அதனை தடுக்கும் முறைகள் குறித்து ஆசிரியர்களாகிய நீங்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் ஒரு கல்லூரி மாணவி டெங்கு நோயால் உயிரிழந்தார். அந்த கல்லூரியை ஆய்வு செய்த போது, விடுதியில் தண்ணீர் சேமிப்பு தொட்டியில் டெங்கு கொசுப்புழு உருவாகியிருந்தது தெரியவந்தது. இதற்கு கல்லூரி நிர்வாகம் தான் பொறுப்பு. எனவே பள்ளி, கல்லூரிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

அவ்வாறு பராமரிக்காமல் அலட்சியம் காட்டினால் டெங்கு பரவினால் அதற்கு நிர்வாகிகள்தான் பொறுப்பாவார்கள். அவர்களுக்கு அபராதம் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சிறிய கப்புகளில் 40 மில்லி தண்ணீர் இருந்தாலே போதும். அதில் இருந்து கொசு உற்பத்தியாகிவிடும். அதேபோல் பள்ளி வளாகத்தில் ஒரே இடத்தில் குப்பைகளை சேர்த்து வைக்கக்கூடாது. உடனுக்குடன் அகற்ற வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை சுகாதார துறையினர் செய்வார்கள். மேலும் மாவட்ட நிர்வாகமும் எந்த நேரத்திலும் உதவி செய்ய தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலகரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.

ஆஸ்பத்திரியில் ஆய்வு

பின்னர் கலெக்டர், தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.வும் உடனிருந்தார்.


Next Story