தூத்துக்குடி அருகே மளிகைக்கடைக்காரர் வீட்டுக்கதவை உடைத்து நகை கொள்ளை


தூத்துக்குடி அருகே  மளிகைக்கடைக்காரர் வீட்டுக்கதவை உடைத்து நகை கொள்ளை
x
தினத்தந்தி 17 Oct 2017 2:00 AM IST (Updated: 16 Oct 2017 9:20 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே மளிகைக்கடைக்காரர் வீட்டுக்கதவை உடைத்து 4 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே மளிகைக்கடைக்காரர் வீட்டுக்கதவை உடைத்து 4 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நகை கொள்ளை

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அய்யன்கோவில் தெருவை சேர்ந்த உலகமுத்து மகன் கல்லத்தியான் (52). அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலையில் கல்லத்தியானும் அவருடைய மனைவியும் மளிகை கடைக்கு சென்றனர். மதியம் 3 மணிக்கு கல்லத்தியான் வீட்டுக்கு சாப்பிட சென்றார். அப்போது வீட்டின் பின்பக்க தகர கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவும் திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லத்தியான் முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கல்லத்தியான் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர். கள்ளச்சாவி மூலம் பீரோவை திறந்து அதில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்றுள்ளனர். நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை முத்தையாபுரம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குண்டர் சட்டத்தில் கைது

* தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாலா (வயது 46). இவர் முத்தையாபுரம் பெட்ரோல் பங்க் அருகில் தள்ளு வண்டியில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். இவர் வியாபாரம் செய்யும் இடத்திற்கு அருகில் சின்னசாமி என்பவர் பஞ்சர் ஒட்டும் கடை வைத்து உள்ளார். வியாபாரத்தை முடித்த பிறகு பாத்திரம் கழுவும் தண்ணீர் சின்னசாமி கடைக்கு முன்பாக சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சின்னசாமி, மாலாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னச்சாமியை தேடி வருகின்றனர்.

* முத்தையாபுரம் போலீசார் ரேந்து சென்ற போது பாரதிநகர் காட்டுப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், விசாரணையில் அவர் அருப்புக்கோட்டை தாலுகா புரசலூரை சேர்ந்த கூலி தொழிலாளி மணிகண்டன் (வயது 36) என்பதும், மது விற்றதும் தெரிய வந்தது. உடனே போலீசார் மணிகண்டனை கைது செய்து அவரிடம் இருந்து 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

* தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் அஜய் மாடசாமி (37). இவர் மீது சாயல்குடி, புதியம்புத்தூர், ஆத்தூர், தாளமுத்துநகர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே அஜய் மாடசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

லாரி பறிமுதல்


* ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு நிலத்தடி நீரை உறிஞ்சிய டேங்கர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டேங்கர் லாரி டிரைவரான முக்காணியைச் சேர்ந்த நயினாரை (வயது 53) போலீசார் கைது செய்தனர். டேங்கர் லாரியை பறிமுதல் செய்து ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

* விருதுநகர் மாவட்டம் செவல்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியை கண்டித்து கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சமுத்திரபாண்டியன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் விஜயா அந்தோணி, விருதுநகர் மாவட்ட துணை செயலாளர் தலித் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கருப்பசாமி பாண்டியன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் கலைவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story