தெருவில் குப்பை அள்ளியதற்கு எதிர்ப்பு தாய் கண்டித்ததால் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
டெங்கு விழிப்புணர்வுக்காக தெருவில் குப்பை அள்ளியதை தாய் கண்டித்ததால் 6–ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை, மீனாட்சியம்மன் நகர், அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் நிஷாந்த் (வயது 12). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த சில தினங்களாக, டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நிஷாந்த் அப்பகுதியில் உள்ள குப்பைக்கழிவுகளை தனது நண்பர்களுடன் சேர்ந்து சுத்தம் செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
நேற்று முன்தினமும் வழக்கம் போல் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள குப்பைக்கழிவுகளை அகற்றிவிட்டு இரவு 7 மணிக்கு மேல் நிஷாந்த் வீட்டுக்கு சென்றான்.
அப்போது அவனது தாய் ‘‘ஊரெங்கிலும் டெங்கு நோயினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நீ எதற்கு குப்பைக்கழிவுகளை சுத்தம் செய்கின்றேன் என இதுபோல செய்து கொண்டிருக்கிறாய். இதனால் உனக்கு ஏதாவது நோய் பாதிப்புகள் வரப்போகின்றது’’ என கண்டித்தார். மேலும், ‘‘உடனே சென்று குளித்துவிட்டு வா’’ என்றும் கூறி உள்ளார்.
இதன் பின்னர் குளியலறைக்கு சென்ற நிஷாந்த் வெகுநேரம் ஆகியும் வெளியில் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவனது தந்தை கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அங்கு நிஷாந்த் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குரோம்பேட்டை போலீசார் நிஷாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.