சென்னை மெரினாவில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்


சென்னை மெரினாவில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்
x
தினத்தந்தி 16 Oct 2017 11:00 PM GMT (Updated: 2017-10-17T01:09:05+05:30)

சென்னை மெரினாவில் நண்பர்களுடன் கடலில் குளித்த கல்லூரி மாணவர் அலையில் சிக்கி கடலில் மூழ்கி பலியானார்.

சென்னை,

ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையை சேர்ந்தவர் ரோகித் குமார். இவரது மகன் சரவணகுமார் (வயது 17). இவர் சென்னை திருநின்றவூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார். இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்தார்.

அங்கு கடலில் நண்பர்களுடன் குளித்து மகிழ்ந்தார். அப்போது திடீரென்று எழுந்த ராட்சத அலையில் சிக்கி, சரவணகுமார் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர்.

இதையடுத்து அந்த பகுதி மீனவர்கள் உதவியுடன் போலீசார் சரவணகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் சரவணகுமார் உடல் எழிலகம் எதிரே உள்ள கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது. உடலை மீட்ட போலீசார், கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* தீபாவளியையொட்டி புழலில் உள்ள 70 கைதிகளுக்கு பரோல் வழங்கி சிறைத்துறை தலைவர் அசுதோஷ்சுக்லா உத்தரவிட்டார்.

* நந்தம்பாக்கம் பகுதியில் நமச்சிவாயம்(60) என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்து 3 பவுன் சங்கிலியை பறித்த அசோக்(20) என்பவர் சிக்கினார்.

* திருமங்கலம் நடுவாங்கரை தனியார் விடுதியில் தங்கி என்ஜினீயரிங் படித்து வந்த வேலூரை சேர்ந்த மாணவி காயத்ரி(21) நேற்றுமுன்தினம் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

* சென்னை துறைமுகத்தில் இருந்து மலேசியாவுக்கு கன்டெய்னர் மூலம் கப்பலில் கடத்த முயன்ற ரூ.3 கோடி மதிப்புள்ள 80 டன் செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

* மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த ஸ்ரீலதா(42) வேளச்சேரி பகுதியில் உள்ள பெண்களிடம் கடன் வாங்கி தருவதாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார்.

Next Story