காஞ்சீபுரத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்
3 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாக்கம் பகுதியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வெள்ளத்தை பார்வையிட்டனர்.
காஞ்சீபுரம்,
கடந்த ஆண்டு சரிவர மழை பெய்யாததால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்தது. கடந்த சில நாட்களாக வேலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள சில அணைக்கட்டுகளில் நீர் நிரம்பிய உபரி நீர் பாலாற்றில் திறந்து விடப்பட்டது.
இதனால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 3 அண்டுகளுக்கு பிறகு தற்போது பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று காஞ்சீபுரம் அருகே பெரும்பாக்கம் பகுதியில் பாலாற்றுக்கு நேரில் சென்று வெள்ளத்தை பார்வையிட்டார்.
ஏராளமான பொதுமக்களும் பாலாற்றுக்கு சென்று வெள்ளத்தை ஆவலுடன் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்கள் சிலர் ஆர்வமிகுதியால் பாலாற்றில் ‘டைவ்’ அடித்து குளித்து மகிழ்ந்தனர்.
இதேபோல் சென்னை பொதுப்பணித்துறை பாலாறு வட்டம் கண்காணிப்பு பொறியாளர் மணி, மாவட்ட பொதுப்பணித்துறை (நீர்ஆதாரம்) செயற்பொறியாளர் முத்தையா ஆகியோரும் பெரும்பாக்கம் பகுதியில் பாலாற்றில் பாய்ந்து ஓடும் வெள்ளத்தை பார்வையிட்டனர்.
அப்போது செயற்பொறியாளர் முத்தையா கூறும்போது, ‘‘பாலாற்றில் பாய்ந்து வரும் வெள்ள நீர் தூசி, மாமண்டூர், அவளூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்’’ என்றார்.
இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது,‘‘பெரும்பாக்கம் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டினால் தண்ணீரை தேங்கி வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்த உதவியாக இருக்கும்’’ என்றனர்.