குடிபோதையில் வீட்டு கதவை திறக்க முயன்றவர் உயிரிழந்த பரிதாபம்


குடிபோதையில் வீட்டு கதவை திறக்க முயன்றவர் உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 16 Oct 2017 11:15 PM GMT (Updated: 16 Oct 2017 9:51 PM GMT)

தானேயில், குடிபோதையில் வீட்டு கதவை திறக்க முயன்றவரின் கையை ஜன்னல் கண்ணாடி குத்தி கிழித்ததில், அதிகளவில் ரத்தம் வெளியேறி பரிதாபமாக உயிரிழந்தார்.

தானே,

தானே நவ்பாடா பகுதியை சேர்ந்தவர் தீபக் கதம்(வயது38). டிரைவர். அங்குள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக இவரது மனைவி அவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்கு மதுகுடித்து விட்டு வந்தார். குடிபோதையில் வீட்டு சாவியை எங்கேயோ தவறவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர் காலால் எட்டி உதைத்து கதவை திறக்க முயன்றார். ஆனால் அவரால் திறக்க முடியவில்லை.

எனவே கதவுக்கு அருகில் உள்ள ஜன்னல் கண்ணாடியை உடைத்து, அதன் வழியாக கையை உள்ளே விட்டு கதவை திறந்து விடலாம் என கருதி தனது கையால் ஜன்னல் கண்ணாடி கதவை உடைத்து உள்ளார்.

இதில், துரதிருஷ்டவசமாக அவரது கையை கண்ணாடி குத்தி கிழிந்தது. அவரது கையில் இருந்து ரத்தம் வழிந்தோடியது. இதனால் தீபக் கதம் வேதனை தாங்க முடியாமல் கதவை திறக்கும் முயற்சியை கைவிட்டார். பின்னர் ரத்தம் சொட்ட, சொட்ட அங்குள்ள சாலை வழியாக நடந்தார். அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால் அவர் ரோட்டிலேயே மயங்கி விழுந்து இறந்து போனார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் போலீசார் அவரை நகைப்பறிப்பு ஆசாமி என கருதினர். விசாரணைக்கு பின்னர் தான் போலீசாருக்கு மேற்படி விவரம் தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story