புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள்-சாராயம் பறிமுதல்


புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள்-சாராயம் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Oct 2017 4:15 AM IST (Updated: 17 Oct 2017 3:45 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள்- சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கும்பகோணம்,

கும்பகோணம் நால்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் மேற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்கள், போலீசாரை கண்டவுடன் காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர். இதனை பார்த்த போலீசார் காரில் சோதனை செய்தனர். அதில் 1,248 குவாட்டர் பாட்டில்கள், 360 டின் பீர், 500 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இவை புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

மதுபாட்டில்கள்- சாராயம் பறிமுதல்

இதையடுத்து மதுபாட்டில்கள், சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி கள்ளத்தனமாக விற்பனை செய்ய கடத்தி வந்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Tags :
Next Story