திருப்பூர் மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி


திருப்பூர் மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 17 Oct 2017 4:30 AM IST (Updated: 17 Oct 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

திருப்பூர்,

தீபாவளி பண்டிகை நாளை(புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பனியன் தொழில் நகரான திருப்பூரில் இருந்து வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.

இதற்காக திருப்பூரில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 645 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலான பனியன் நிறுவனங்களில் போனஸ் பட்டுவாடா செய்து முடிக்கப்பட்டு தீபாவளி விடுமுறை விடப்பட்டுள்ளது. வருகிற 23-ந் தேதி பனியன் நிறுவனங்கள் மீண்டும் திறந்து செயல்பட உள்ளன. இன்று(செவ்வாய்க்கிழமை) பல பனியன் நிறுவனங்களில் போனஸ் வழங்கப்பட உள்ளது.

போனஸ் பெற்ற தொழிலாளர்கள் கடை வீதிகளுக்கு சென்று ஜவுளி, எலெக்ட்ரானிக் பொருட்கள், தங்க நகைகள் ஆகியவற்றை வாங்கி செல்கிறார்கள்.

இதனால் திருப்பூர் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. குறிப்பாக புதுமார்க்கெட் வீதி, பழைய பஸ் நிலையம், காமராஜர் ரோடு, குமரன் ரோடு, அவினாசி ரோடு, பி.என். ரோடு புதிய பஸ் நிலையம் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கடை வீதிகளை நோக்கி மக்கள் படையெடுத்ததால் நேற்று மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் ரோட்டில் அங்குமிங்கும் முண்டியடித்து சென்றனர்.

போக்குவரத்து போலீசார் நின்றும் கூட, நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. நான்கு சக்கர வாகனங்கள் ரோட்டில் நீண்ட வரிசையில் நின்றன. காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

இன்று மாநகரில் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பிரதான ரோடுகளின் கரையோரம் வியாபாரிகள் தற்காலிக கடைகளை அமைத் துள்ளனர். இதன்காரணமாகவும் நெரிசல் அதிகரித்துள்ளது. எனவே மாநகர போலீசார் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள். 

Related Tags :
Next Story