நாகர்கோவிலில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முற்றுகை தி.மு.க.வினர் போராட்டம்


நாகர்கோவிலில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முற்றுகை தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2017 4:30 AM IST (Updated: 17 Oct 2017 3:52 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகர் பகுதிகளில், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிக்கப்படாமல் நகரின் பல இடங்களிலும் சாலைகள் தோண்டப்பட்டு கிடப்பதாக கூறப்படுகிறது.

எனவே, பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்கவேண்டும், சீரமைப்பு பணிக்காக சாலையை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகர்கோவில் சிதம்பரதாணு தெருவில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது.

இந்த போராட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமைதாங்கினார். நகர செயலாளர் வக்கீல் மகேஷ் முன்னிலை வகித்தார். போராட்டத்தை தொடர்ந்து சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி பிரசாத் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தி.மு.க.வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பின்னர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.நிருபர்களிடம் கூறியதாவது:–

கடந்த 2012–ம் ஆண்டு முதல் நாகர்கோவில் நகர் முழுவதும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்று வரையில் அந்த பணிகள் முடிவடையவில்லை. இதனால், சாலைகள் குண்டும்– குழியுமாக மாறி வாகனபோக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாலைகளை சீரமைக்கக்கோரியும், பாதாள சாக்கடை பணியை முடிக்கக்கோரியும் தொகுதி எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில் நான் அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒப்பந்த நிதி அரசிடம் இருந்து வரவில்லை என பதில் கூறினார்கள். தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தால் இந்த பணிகள் சரியான நேரத்தில் முடிந்திருக்கும். ஆனால் நிதி ஒதுக்கீடு செய்வதில் செய்த தாமதத்தால் தற்போது சீரமைப்பு பணிகளும் தாமதமாக செய்யப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்ட பணிகளை முடித்து சாலைகளை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்தால் தான் சாலை செப்பனிடும் பணியை அதிகாரிகள் தொடங்கமுடியும்.

எனவே, பாதாள சாக்கடை பணிகள் நிறைவேற்றப்படாத இடங்களில் உடனே பணிகளை விரைந்து முடித்திடவேண்டும். வருகிற 31–ந்தேதிக்குள் இந்த பணிகளை நிறைவேற்றி தருவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர்.

எனவே, தி.மு.க.வின் உள்ளிருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. குறிப்பிட்ட கால அளவுக்குள் பணிகள் முடிவடையாவிட்டால் தி.மு.க.வின் போராட்டம் தொடரும்.

 இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டத்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஷேக்தாவூது, வக்கீல் உதயகுமார், பெஞ்சமின், எம்.ஜே.ராஜன், வளர்அகிலன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story