பா.ஜனதாவினர் போலி தகவல்களை பரப்புகிறார்கள் நடிகை ரம்யா குற்றச்சாட்டு
பா.ஜனதா கட்சியினர், சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களை பரப்புகிறார்கள் என்று நடிகை ரம்யா குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு,
முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவு தலைவியாக உள்ளார். இவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
டுவிட்டர், முகநூல்(பேஸ்புக்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்து மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், பா.ஜனதா கட்சியினர் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்புகிறார்கள். அந்த கட்சியை சேர்ந்த சிலர் 2 முதல் 3 டுவிட்டர் கணக்குகளை போலியாக கையாளுகிறார்கள்.குஜராத், இமாச்சலபிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத்தில் கடந்த 24 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி செய்கிறார்கள். விரைவில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் ‘விகாஸ் காண்டோ தயோ சி‘ என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் நாங்கள் பிரசாரம் செய்து வருகிறோம். இதன்மூலம் குஜராத்தில் நிலவும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துரைப்போம்.
இமாச்சலபிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்ட 95 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. எனவே, இந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட வளர்ச்சி பணிகள் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்ய இருக்கிறோம்.
கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தவில்லை. சில தலைவர்கள் டுவிட்டர் கணக்கு வைத்திருந்தாலும் அவர்கள் அதை முறையாக பயன்படுத்துவது இல்லை. இதுதொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்த இருக்கிறோம். ஆனாலும், முதல்–மந்திரி சித்தராமையா, மந்திரிகள் கிருஷ்ணபைரே கவுடா, பிரியங்க் கார்கே, மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் ராஜீவ் கவுடா ஆகியோர் சமூக வலைத்தளங்களை நன்றாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு ரம்யா கூறினார்.
குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் பெண்களை விமர்சிக்கிறார்கள்
மேலும், சமூக வலைத்தளங்களில் அவதூறாக விமர்சனம் செய்பவர்களிடம் இருந்து பெண்கள் எப்படி தப்பிக்கலாம் என்ற கேள்விக்கு ரம்யா பதில் அளிக்கையில், ‘பெண்கள் ஆன்-லைனிலும், ஆப்-லைனிலும் விமர்சனம் செய்யப்படுகிறார்கள். குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள், சமூக வலைத்தளங்கள் வழியாக பெண்களை விமர்சிக்கிறார்கள். இதை கண்டுகொள்ள தேவையில்லை. சமூக வலைத்தள இயக்கங்களில் பெண்கள் அதிகளவில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்‘ என்றார்.