நெல்லையில் விவசாயிகள் பயிர் காப்பீட்டு தொகையை செலுத்த வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள்
நெல்லையை அடுத்த மேலக்கல்லூரில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.
பேட்டை,
நெல்லையை அடுத்த மேலக்கல்லூரில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். முகாமில் 14 முதியோர்களுக்கு ஓய்வூதிய ஆணைகள், 4 பயனாளிகளுக்கு இலவச பட்டா மாற்றம் மற்றும் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், கிராமத்தில் உள்ள மக்கள் தேவையான உதவிகள் பெற, இதன் மூலம் தீர்வு ஏற்படுகிறது. வடகிழக்கு பருவமழை அடுத்த சில நாட்களில் தொடங்கப்பட உள்ளது. கடந்த 5–ந் தேதி முதல் அணைகளில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு காப்பீட்டு தொகையை செலுத்த வேண்டும். இதனால் மழை இல்லாமல் தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட காரணத்தால் ஏற்படும் இழப்புகளில் இருந்து விவசாயிகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் மைதிலி, பயிற்சி உதவி கலெக்டர் இளம்பகவத், மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி புண்ணியகோட்டி, தாசில்தார் கணேசன், சமூக பாதுகாப்பு தாசில்தார் மோகன், ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் லெவன்சியா சில்வேசா, குடிமை பொருள் வட்ட வழங்கல் தாசில்தார் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.