கந்தசஷ்டி திருவிழா பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தகவல்


கந்தசஷ்டி திருவிழா பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தகவல்
x
தினத்தந்தி 17 Oct 2017 8:45 PM GMT (Updated: 17 Oct 2017 4:05 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது;–

கண்காணிப்பு


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி நகர் பகுதி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக பொதுமக்கள் அதிக அளவில் கூடுகின்ற இடங்களில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. பொதுமக்களும் தங்களை பாதுகாக்கும் வகையில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

கந்தசஷ்டி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு வருகிற 20–ந் தேதி முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 20–ந் தேதி முதல் 23–ந் தேதி வரை சுமார் 500 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 24–ந் தேதி மற்றும் 25–ந் தேதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

போக்குவரத்து ஏற்பாடுகளும், வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளது. போக்குவரத்து பாதிக்காத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளது.

குற்ற நடவடிக்கைகளை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட உள்ளன. கந்தசஷ்டி நிகழ்ச்சியை பக்தர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் பல இடங்களில் எல்.இ.டி. டி.வி.கள் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story